இன்றிரவு வருகிறார் மைக் பொம்பியோ – MCC உடன்படிக்கை கைச்சாத்திடப்படமாட்டாது!

அமெரிக்க இராஜாங்கச்செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கை பயணத்தின்போத எம்சீசீ உடன்படிக்கையில் கைச்சாத்திடப்படமாட்டாது என்று அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்திலிருந்து  ‘ஒன்லைன்’ மூலம் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சீனாவின் உயர்மட்ட தலைவர் ஒருவர் அண்மையில் இலங்கைக்கு வந்திருந்தார். அவரின் வருகைக்கு முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையில் காணொளி மாநாடுமூலம் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. தற்போது அமெரிக்க இராஜாங்கச்செயலாளர் இங்கு வரவுள்ளார். நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவதற்காக இராஜதந்திர மட்டத்தில் இவ்வாறான வருகைகள், சந்திப்புகள் இடம்பெறுவது வழமையே. எனவே, ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதை மையப்படுத்தி அமெரிக்க இராஜாங்கச்செயலரின் இலங்கை விஜயம் அமையவில்லை.

இலங்கையானது நடுநிலையான வெளிநாட்டுக்கொள்கையையே கடைபிடித்துவருகின்றது.அனைத்து நாடுகளுடனும் நட்புறவை பேணுவோம், ஆனாலும் எந்தவொரு நாட்டுக்கும் இலங்கையை பயன்படுத்திக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என எமது ஜனாதிபதி தெளிவாக அறிவித்துவிட்டார். அதேபோல் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கான வாய்ப்பையும் வழங்கமாட்டோம்.

அமெரிக்க இராஜாங்க செயலரின் இலங்கை பயணத்தின்போது எந்தவொரு உடன்படிக்கையிலும் கைச்சாத்திடுவதற்கு நாம் எதிர்ப்பார்க்கவில்லை. 12 மணிநேரம் குறுகிய பயணத்தை மேற்கொண்டே இங்கு வருகிறார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்துவார்.” – என்றார்.

அதேவேளை, அமெரிக்க இராஜாங்கச்செயலாளர் இன்றிரவு 7.30 மணிக்கு இலங்கை வருகிறார். 12 மணிநேரமே அவர் தங்கியிருப்பார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

Related Articles

Latest Articles