ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் இன்று பணிபுறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
அரசதுறை, அரசசார்பற்ற தனியார் துறை, பெருந்தோட்டத்துறை, வெகுஜன அமைப்புகள் உள்ளிட்ட பல துறைகள் கூட்டாக இணைந்தே இதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இப்போராட்டத்தில் அரச நிர்வாக சேவையும் இணைந்துள்ளமை விசேட அம்சமாகும் என தொழிற்சங்க பிரமுகர்கள் தெரிவித்தனர்.
அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள், மின்சார சபை தொழிற்சங்கங்கள், சுகாதார தொழிற்சங்கங்கள், துறைமுக ஊழியர்சார் தொழிற்சங்கங்கள், தபால் துறைசார் தொழிற்சங்கங்கள், பொருளாதார மத்திய நிலையங்களில் உள்ள தொழிற்சங்கங்கள், வங்கிசார் தொழிற்சங்கங்கள் உட்பட மேலும் பல தொழிற்சங்கங்கள், பணி புறக்கணிப்பு போராட்டத்துக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.
அத்துடன், மீனவ அமைப்புகள், விவசாய அமைப்புகள், ஆட்டோ சாரதிகள் சங்கங்கள் என்பனவும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளன. அதேபோல அரச வைத்தியர் அதிகாரிகள் சங்கமும் கூட்டு தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கியுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தொழிற்சங்க பிரமுகர்கள்,
” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அரசும் பதவி விலக வேண்டும் என நாட்டு மக்கள் வலியுறுத்திவருகின்றனர். மக்களின் இந்த கோரிக்கைக்கு அரசு செவிமடுக்க வேண்டும். பதவி விலகுவதற்கு ஒருவாரம் அவகாசம் வழங்கப்படும். அதற்குள் தீர்வு இல்லையேல், சம்பந்தப்பட்டவர்கள் பதவி விலகும்வரை, போராட்டங்களை மேற்கொள்ளவும் நாம் தயார்.” – என்று குறிப்பிட்டனர்.