நாட்டில் நிலவும் இரசாயன உரத்தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா மாவட்டம் மற்றும் ஊவா பிரதேச விவசாயிகள் மத்தியில் நிலவும் இரசாயன உரத் தட்டுப்பாடு காரணமாக சகலவிதமான விவசாய பயிர் செய்கையிலும் பாரிய பின்னடைவை அடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயத்தை மாத்திரம் நம்பி வாழும் விவசாயிகளின் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஊவா பிரதேசத்தில் நெற்பயிர் செய்கையுடன் மரக்கறி பயிர் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் உருளைக்கிழங்கு மற்றும் மலர் பயிர்ச்செய்கை நாளுக்கு நாள் பாதிப்படைந்து வருவதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் தாம் கையிருப்பில் வைத்திருந்த உரங்கள் பயிர் செய்கைக்கு பாவித்து தீர்ந்து விட்ட நிலையில் தற்போது பாரிய பிரச்சினைக்கு தாம் முகம் கொடுத்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். அதேவேளை பிரதேச கமநல சேவை திணைக்களத்தின் ஊடாக கையிருப்பில் காணப்பட்ட குறைந்தப்பட்ச உரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவும் முறையாக விநியோகிக்க தவறு இழைக்கப்பட்டுள்ளதாகவும் சிறு தோட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் எதிர்வரும் காலங்களில் விவசாயத்தை கைவிட்டு வீதிக்கு வரும் நிலையும் தோன்றியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்ட பகுதிகளில் மரக்கறி விவசாயத்தை உப வாழ்வாதாரமாக நடத்தி வரும் மக்களுக்கு உரத்தை வழங்குவதில் பிரதேச கமநல சேவை திணைக்களங்கள் பாரபட்சம் காட்டிவருவதாகவும் பெருந்தோட்ட பகுதி விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விவசாய நடவடிக்கையை முடக்கி காணிகளை தரிசு நிலமாக்க திட்டமிடுகிறதா என்ற கேள்வியும் நுவரெலியா மாவட்ட விவசாயிகள் மனதில் எழுகின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் கடன் சுமையிலிருந்து பாதுகாக்க உரத்தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.