இலங்கை சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் பூர்த்தியாகின்றது. பல நெருக்கடிகளை இலங்கை கடந்துவந்துள்ளது. போர், வன்முறை, பேரிடர் என இலங்கை வாழ் மக்கள் சொல்லணாத் துயரங்களை அனுபவித்துவிட்டனர். 75 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இலங்கை மிகப் பெரிய சவாலை சுதந்திரத்தின் பின்னரான வரலாற்றில் சந்தித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரம் வாழ்வா? சாவா? நிலையில் இருக்கிறது.
இலங்கைக்கு ஏன் இந்த நிலைமை என்ற கேள்விகள் இலங்கையர் மனங்களில் இருக்கின்றன. தங்களின் அரசியல் புரிதல்களுக்கமைய மக்கள் இதற்கு விடையளித்துக் கொள்கின்றனர்.
ஜப்பான் இரண்டு அணுகுண்டுகளைத் தாங்கிய பின்னரும் மீண்டெழுந்தது. இன்று உலகமே வியக்கும் வண்ணம் வளர்ந்து நிற்கிறது. இதற்கு ஜப்பானின் அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும் முதன்மையானவை.
இலங்கையும் மிகப் பெரிய நெருக்கடியில் தான் இருக்கிறது. ஆனால் இலங்கைக்கு இன்னும் மீண்டெழும் பலமும், வளமும் இருக்கிறது.
சார்க் பிராந்தியத்தில் இந்திய முன்னிலை வகிக்கிறது. தற்போது ஜி 20 தலைமைத்துவத்தையும் இந்தியா தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த நிலையில், பிராந்தியத்தில் அண்டைய நாடுகளுடனான ஒற்றுமையும் சமூக, பொருளாதார உறவுகளும் இலங்கைக்கு பேருதவியாக அமையும். மேற்கத்தேய நாடுகள் இந்தியாவை குறிவைத்துள்ளன. குறிப்பாக இந்தியச் சந்தையை மேற்குலகம் குறிவைத்து பல காய்நகர்த்தல்களை முன்னெடுத்துள்ளது. இந்தச் சந்தையை இலங்கையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கான வாய்ப்புக்கள் இலங்கைக்கே அதிகமாக இருக்கிறது. 1.4 பில்லியன் சனத்தொகையைக் கொண்ட இந்தியா மிகப் பெரிய சந்தைவாய்ப்பு.
பூகோள ரீதியாகவும் இந்திய மற்றும் இலங்கை அமைவிடம் என்பது மிக முக்கியமானது. குறிப்பாக தொப்புள் கொடி உறவு என்று தமிழர்களை எப்போதும் விட்டுக்கொடுக்காத மனப்பான்மை தமிழக மக்களுக்கு இருக்கிறது. பெளத்தத்தைப் பொறுத்தவரை சிங்கள மக்களுக்கும் இந்தியாவுடன் மிக நெருங்கிய பிணைப்பு இருக்கிறது. இவை அனைத்தும் இலங்கைக்கு மிகப் பெரிய வரப்பிரசாதங்களாகும். 75 சுதந்திர தினத்துடன், அடுத்த 25 ஆண்டுகளுக்கான அபிவிருத்தித் திட்டங்களை தற்போதைய ஜனாதிபதி முன்வைத்துள்ளார். இந்தத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க இந்தியாவின் உறவு பேருதவியாக இருக்கும்.
இந்த உறவுமுறையின் முக்கியத்துவத்தை அறிந்துள்ள இலங்கையின் சபாநாயகர் இதனை வலியுறுத்தியிருந்தார்.
இலங்கையின் வளர்ச்சியில் பல்வேறு வழிகளிலும் பிரதான பங்காளியாக இந்தியா திகழ்கின்றது. இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த உறவுகள் மேலும் வலுப்பெற வேண்டும் என்று சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்திருந்தார்.
இந்தியாவின் 74ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற வைபவத்தில் அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
இலங்கையின் பங்காளியாகவே இந்தியா செயல்பட்டு வருகிறது. இலங்கை சவால்களை எதிர்கொள்ளும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், இந்தியா துரிதமாக பதிலளித்தது. கடந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாதவாறு உதவி செய்தது. 4 பில்லியன் பெறுமதியான கடன் மற்றும் ஏனைய உதவிகளை இலங்கைக்கு வழங்கியது. அத்துடன், வர்த்தக பங்காளியாகவும் விளங்குகிறது. சுற்றுலாத் துறையிலும் முதலீட்டு ஆதாராமாகவும் இந்தியா விளங்குகிறது. பல்வேறு வழிகளிலும் இலங்கையின் வளர்ச்சியில் பிரதான பங்காளியாக இந்தியா இருக்கிறது. இவ்வாண்டு இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றன. இந்திய மற்றும் இலங்கை மக்களிடையில் இந்த உறவு தொடரும் என்று நம்புகிறேன். இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புக்களும் இதன்மூலம் மேம்படுத்தப்படும் என்று சபாநாயகர் இருநாட்டு உறவுகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில்தான், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்திய – இலங்கை உறவின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.
துறைமுகம் , மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி, ஹைட்ரோ கார்பன் உட்கட்டுமான அபிவிருத்தி தொடர்பில் இந்தியா கரிசனை கொண்டுள்ளது. விவசாயம், பாலுற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயர் கல்வியிலும் மேலதிக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது.
பல தசாப்தங்களாக பாரிய நிறுவனங்கள் இலங்கையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்பட்டு வருகின்றன. காலி முகத்திடலில் பாரிய இந்திய நிறுவனங்கள் வர்த்தக நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றன.
இலங்கையில் அரசியல் மாற்றங்கள் ஜனநாயகக் கட்டமைப்பு , அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக பொறிமுறைக்கு அமையவே முன்னெடுக்கப்படுகின்றன. இந்திய-இலங்கை உறவு என்பது யார் அதிகாரத்தில் உள்ளார் என்பதைப் பொறுத்து அமைவதல்ல. ஆயிரமாண்டு காலமாக இரு நாட்டு மக்களிடையில் தொடரும் பிணைப்பை அவ்வாறே தொடர்ந்து முன்கொண்டு செல்ல எதிர்பார்த்துள்ளோம் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கூறியிருந்தார்.
உண்மையில் 75ஆவது சுதந்திர தினத்தை இலங்கை கொண்டாடும் இவ்வேளையில், மிக நெருங்கிய, முக்கிய உறவாக, அண்டை நாடாக மாறியிருக்கிறது. இந்த உறவு இலங்கையின் அடுத்துவரும் வளர்ச்சியில் மிகப் பெரிய பங்குவகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.