‘இலங்கையில் இன்னும் 4ஆம் கட்ட கொரோனா அலை ஏற்படவில்லை’

இலங்கையில் இன்னும் கொரோனா 4 ஆவது அலை ஏற்படவில்லை என்றும் மூன்றாம்கட்ட அச்சுறுத்தலையே எதிர்கொண்டுள்ளோம் என்றும் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் எதிரணி பிரதம கொறடா லக்‌ஷமன் கிரியல்லவால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா சமூகத்தொற்று அபாயத்திலிருந்து தற்போது நாடு விடுபட்டுள்ளது என்ற அறிவிப்பை சில காரணிகளை அடிப்படையாகக்கொண்டே நான் வெளியிட்டிருந்தேன். விஞ்ஞானப்பூர்வமாக 4 கட்டங்களாகவே இந்நோய் பரவல் கணிக்கப்படுகின்றது.

நோயாளி எவரும் இல்லை என்பது முதல் கட்டமாகும்,  ஆங்காங்கே நோயாளிகள் அடையாளம் காணப்படுதல் மற்றும் அவர்களின் தொடர்புகளை கண்டுபிடிக்ககூடியதாக இருக்கும் நிலையே 2ஆம் கட்டமாகும்.  கடற்படை, கந்தக்காடு போன்ற கொத்தணி பரவல்களே மூன்றாம்கட்ட அலையாக கருதப்படுகின்றது.

சமூகத்தில் வகைதொகையின்றி எல்லா இடங்களிலும் நோயாளிகள் அடையாளம் காணப்படுதல், எங்கிருந்து எப்படி அவர்களுக்கு தொற்று பரவியது என்பதை கண்டுபிடிக்கமுடியாத நிலை நான்காம் கட்டமாகும். இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்நிலைமை காணப்படுகின்றது.

சமூகதொற்று குறித்த அறிவிப்பை நான் விடுப்பதற்கு முன்னர் 25 ஆயிரம் பேரை சமூகத்தில் இருந்து பரிசோதித்திருந்தோம். அவர்களில் எவருக்கும் வைரஸ் தொற்றவில்லை. நாளாந்தம் 10 பேரிடம் பிசிஆர் பரிசோதனை நடத்துமாறு பிரதான வைத்தியசாலைகளுக்கு அறிவித்திருந்தோம். அதன்போதும் எவரும் அடையாளம் காணப்படவில்லை. நிமோனியா போன்ற நோயினால் உயிரிழந்தவர்களின் மாதிரிகளும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.

அதன்போதும் தொற்று ஏற்படவில்லை. இவற்றை அடிப்படையாகக்கொண்டே செப்டம்பர் 3 ஆம் திகதி நாட்டில் சமூகத்தொற்று இல்லை என்ற அறிவிப்பை விடுத்திருந்தேன். ஆனாலும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எமது நாட்டவர்கள் அழைத்துவரப்படுகின்றனர், எனவே, தொடர்ந்தும் அவதானமாக செயற்படவேண்டும் எனவும் கூறியிருந்தேன். எனது உரையின் ஒரு பகுதியை மாத்திரம் தூக்கிப்பிடிக்காமல் முழு உரையையும் செவிமடுக்குமாறு குறிப்பிட்டேன். சுவாசிக்கும்போதுகூட தொற்று பரவலாம் என்ற எச்சரிக்கையைக்கூட நான் விடுத்திருந்தேன். ” – என்றார் சுகதார அமைச்சர்.

இதன்போது எழுந்த லக்‌ஷ்மன் கிரியல்ல, அமைச்சர் ஏப்ரலில் விடுத்த அறிவிப்பு தொடர்பிலேயே நான் குறிப்பிட்டிருந்தேன், இவர் செப்டம்பர் பற்றி கதைக்கின்றார். ஏப்ரலில் எவ்வாறு குறிப்பிடமுடியும், எதனை அடிப்படையாகக்கொண்டு அறிவிப்பு விடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பவித்ராதேவி,

” எல்லா சந்தர்ப்பங்களிலும் நான் பொறுப்புடனேயே உரையாற்றியுள்ளேன். சமூகத்தில் தொற்று இல்லை என்பதாலேயே மாஸ் அணியாமல் எதிர்க்கட்சித் தலைவருக்குகூட நடமாட முடிந்தது. தேர்தலையும் எதிர்கொண்டனர். நாம் உண்மையையே கூறினோம். இலங்கையில் 4ஆவது கட்டம் இல்லை.” -என்றார்.

Related Articles

Latest Articles