இலங்கையை உலுக்கிய விமான விபத்து! இன்றுடன் 46 ஆண்டுகள் நிறைவு!!

191 ​பேரின் உயிரை காவுகொண்ட பாரிய விமானவிபத்து இடம்பெற்று இன்றுடன் 46 வருடங்களாகின்றன.

விமலசுரேந்திர நீர் மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியான நோட்டன்பிரிஜ் நகரை அண்டிய பகுதியில் இவ்விபத்து 1974 இல் இடம்பெற்றது.

1974ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இந்தோனேசியா சுராபயாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா நோக்கிய பயணித்த மார்டின் எயார் டீ.சீ. 8 ரக பயணிகள் விமானமே சப்த கன்னியா என அறியப்படும் ஏழு கன்னியர் மலையில் ஐந்தாவது குன்றின் மீது மோதி சிதறியது. விமானமோட்டிகள் உட்பட 191 பேரும் அதே இடத்தில் உடல் சிதறி பலியாகினர்.

191 பேரின் உயிரை பலியெடுத்த இந்த ஏழு கன்னியர் மலையை ஆங்கிலத்தில் வில்கின் ஹில்ஸ் என அழைப்பர். விமானத்தின் கறுப்பு பெட்டியில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்கான காரணம் என கூறப்படுகின்றது. இவ்விபத்தில் பலியான 190 பேரின் உடலை தெப்பன் தோட்ட கொத்தலென என்ற இடத்தில் புதைத்தனர்.

அடையாளம் காணமுடியாதவாறு இருந்த விமானப் பெண்ணின் உடலை அவரது காதலர் விமானம் மூலம் இந்தோனோசியாவுக்கு கொண்டுச் சென்ற நெகிழ்ச்சியான சம்பவமும் இதன்போது இடம்பெற்றது. விபத்து ஏற்பட்ட மறுநாள் அதிகாலையில் இலங்கை இராணுவம்,விமானப்படையினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விமானத்தின் கருப்பு பெட்டியை தேடிய போதிலும் அப்பாகம் கிடைக்கவில்லை.

விமான பாகங்களில் இரண்டு டயர்கள் மட்டுமே இன்றுவரை பாதுகாக்கப்பட்டுவருகின்றது. ஒரு டயர் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்னொரு டயர் விமலசுரேந்திர நீர் மின்சார நிலையத்திற்கு செல்லும் வழியில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுதூபியும் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போதும் இந்த நினைவு தூபியை இறந்தவர்களின் உறவினர்கள் வருடாந்தம் வருகை தந்து பிராத்தனைகள் மேற்கொண்டு செல்கின்றனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் இம்முறை அவ்வாறு நடைபெறவில்லை. இலங்கையில் நடந்த மிக மோசமான விமான விபத்தாக இது கருதப்படுகின்றது.

Related Articles

Latest Articles