இந்தியாவின் நிலையான, துரிதமான பொருளாதார வளர்ச்சியும், தொழில்நுட்ப முன்னேற்றமும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, பொருளாதார மீட்சி, புனரமைப்பு பணிகள் ஆகியவற்றுக்கு இன்றியமையாததாகும்.
இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமானதும் ஆழமானதுமான இருதரப்பு பொருளாதார பங்குடைமையை உருவாக்குவதற்கும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பு இதன்மூலம் கிடைக்கிறது.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்திய – இலங்கை பொருளாதார பங்குடைமையின் இலக்கை மையப்படுத்தி பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.
குறிப்பாக மின்சக்தி, எரிசக்தி துறையில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் மிக முக்கியமானவை. குறிப்பாக இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கிடையில் முத்தரப்பு மின்சக்தி உடன்படிக்கை பரஸ்பர மின்சக்தி ஏற்றுமதியை வலுப்படுத்தியுள்ளது. இதனை மையப்படுத்தி இலங்கை – இந்தியா இடையிலான இரு தரப்பு மின்சக்தி ஏற்றுமதி முயற்சிகள் இலங்கைக்கு எரிசக்தி துறையில் முன்னேற்றகரமான நகர்வாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
மேலும், இரு நாட்டு மக்களிடையே நாகரீக உறவுகள், புவியியல் ரீதியான நெருக்கம், கலாசார தொடர்பு மற்றும் புராதன நன்மதிப்பு ஆகியவற்றால் வழங்கப்பட்டுள்ள இணையற்ற நன்மைகளும் ஏராளம். இவை குறித்து ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்டது.
பகிரப்பட்ட மற்றும் நிலையான பொருளாதார செழுமையை உருவாக்கும் வகையில் ஏற்கனவே உள்ள இணக்கப்பாடுகள் மற்றும் ஏனைய மேலதிக வசதிகளைப் பயன்படுத்துவதற்கான முயற்சியையும் இரு நாட்டுத் தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
இந்த நோக்கங்களின் அடிப்படையில், இவற்றை செயல்படுத்தும் முக்கிய கருவியாக, சகல பரிமாணங்களிலும் தொடர்புகளை வலுவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்குமான முக்கியத்துவம் குறித்தும் இரு தலைவர்களும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துரையாடியிருந்தனர்.
இதற்கமையவே, மின்வலு, எரிசக்தி துறையில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக புதுப்பிக்கத்தக்க சக்தியை மேம்படுத்துவதில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இது இலங்கையின் முக்கியத்துவமிக்க புதுப்பிக்கத்தக்க சக்தியினை மேம்படுத்துவதற்காக கரையோர காற்றாலைகள், சூரியக்கலங்கள் மூலமான மின்சக்தி உட்பட இலங்கையின் குறிப்பிடத்தக்க புதுப்பிக்கத்தக்க சக்தி ஆற்றலை மேம்படுத்தும்.
இதனால் 2030 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் ஊடாக 70 வீதமான மின் தேவையைப் பூர்த்தி செய்வதை இலக்காகக் கொண்டிருக்கும் இலங்கையின் நோக்கம் வெற்றியடைவதையும் உறுதிசெய்துகொள்ள முடியும்.
அத்துடன், இலங்கையில் மின்சார உற்பத்தி செலவினத்தை குறைப்பது மட்டுமல்லாமல் இலங்கைக்கான அந்நியச் செலாவணிக்குரிய நம்பகமான மற்றும் வலுவான தளத்தினையும் உருவாக்கும் நோக்குடன் BBIN நாடுகள் உட்பட இலங்கைக்கும் ஏனைய பிராந்திய நாடுகளுக்கும் இடையில் நேரடியான வர்த்தக மின் சேவைகளை செயல்படுத்துவதற்காக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உயர்வலு மின்சக்தி விநியோகக் கட்டமைப்பை ஸ்தாபிப்பது என்ற இணக்கப்பாடும் எட்டப்பட்டது.
இதற்கு மேலதிகமாக, இலங்கையின் மின் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மூலங்களை அதிகரிப்பதை இலக்காகக் கொண்டு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பசுமை ஹைட்ரோஜன், பசுமை அமோனியா ஆகியவற்றின் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், சம்பூரில் சூரியமின்கல திட்டம் மற்றும் எல்.என்.ஜி திட்டம் ஆகியவை குறித்த புரிந்துணர்வை துரிதமாக அமுல்படுத்தவும் இணக்கம் எட்டப்பட்டது.
முக்கியமாக, திருகோணமலை எண்ணெய்தாங்கி பண்ணைகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திக்கான தற்போதைய ஒத்துழைப்பானது, திருகோணமலை பிராந்தியத்தில் பரஸ்பரம் நன்மை பயக்கும் ஒத்துழைப்பு திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கான பெருமுயற்சியை பிரதிபலிக்கின்றது,
கைத்தொழில் மின்சக்தி, பொருளாதார செயற்பாடுகள் ஆகியவற்றுக்கான பிராந்திய மற்றும் தேசிய மையமாக திருகோணமலையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும் இணக்கம் காணப்பட்டது.
இலங்கைக்கு மலிவானதும் நம்பகமானதுமான எரிசக்தி வளங்களின் உறுதியான விநியோகத்தை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டு இந்தியாவின் தென்பகுதியில் இருந்து இலங்கைக்கு பல்பொருள் பெற்றோலிய குழாய் கட்டமைப்பை நிர்மாணிப்பதற்கான ஒத்துழைப்பு குறித்தும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் மேல்நிலை (UPSTREAM) பெற்றோலிய வளத்துறையை அபிவிருத்தி செய்யும் இலக்குடன் இலங்கை கரைக்கு அப்பாலுள்ள பகுதிகளில் பரஸ்பர இணக்கப்பாட்டுக்கு அமைவாக கூட்டு அகழ்வு மற்றும் ஹைட்ரோகாபன் உற்பத்தியை மேற்கொள்வது குறித்தும் கூட்டு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயத்தின் போது எரிசக்தி துறையில் எட்டப்பட்ட இந்த இணக்கப்பாடுகள், இலங்கையின் எரிசக்தி துறையில் பிராந்தியத்தில் ஒருங்கிணைந்த அபிவிருத்தியை நோக்கிச் செல்வதற்கு மிகவும் பலமான அத்திவாரமாக அமைந்துள்ளது.