இலங்கை பற்றி எரிகிறது… பிடில் வாசிக்கிறார் ஜனாதிபதி!

– வீ.ஏ.கே. ஹரேந்திரன்

கொவிட் பெருந்தொற்றால் பலர் வேலை இழந்துள்ளனர். அன்றாடம் உழைத்து உண்போர், உணவுக்கா வீதிகளில் நிவாரணத்திற்காக காத்துக்கிடக்கின்றனர். நடுத்தர மக்கள் பெற்ற கடனை செலுத்த முடியாது திணறுகின்றனர். சிறு வியாபாரிகள் முடங்கிப் போயுள்ளனர். பெண்கள் கைகளில் இருந்த சொற்ப நகைகளையும் அடகுக் கடைகளில் வைத்துவிட்டனர்.

வர்த்தக சமூகம் நாளை என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது. நாடு கடன்பொறியில் சிக்கித் தவிக்கிறது. வங்கிக் கட்டமைப்பு சரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் பெரு வர்த்தகர்கள் கவலை கொண்டுள்ளனர். பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் பிள்ளைகள் வீட்டில் ஒன்லைன் கல்வி கிடைத்தும் கிடைக்காமலும் தடுமாறுகின்றனர். பெற்றோர், ஒன்லைன் கல்வியில் பிள்ளைகளைக் கரை சேர்க்க மேலும் கடன்வாங்குகின்றனர்.

உலகையே பெருந்தொற்று பாதித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் பிழையான பொருளாதார, வெளிவிவகாரக் கொள்கைகளால் நாடு திணறி வருகிறது.

இந்தத் திண்டாட்டங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

69 நிமிட உரை. முதல் பத்து நிமிடம் 12 வருடங்களுக்கு முன்னர் முடிக்கப்பட்ட போர் பற்றிய பாராயணம். அடுத்த 15 – 20 நிமிடங்கள் மட்டும் கொவிட் குறித்த அரசாங்கத்தின் செயற்பாடுகள். மக்களின் கவனயீனமே விபரீதததிற்கு காரணமென்று குற்றச்சாட்டு. இந்த நெருக்கடிகளில், தான் செய்த நல்லவை பற்றி யாரும் பேசுவதில்லை என்று குறை வேறு.

உணவுக்காக அலைந்து திரியும் மக்களும், கல்விக்காக ஏங்கும் பிள்ளைகளும், தொழில் இழந்து தவிக்கும் இளைஞரும், வர்த்தகரும் ஜனாதிபதியிடமிருந்து நம்பிக்கை செய்தி வரும் என்று காத்திருந்தால் ஏமாற்றமே மிஞ்சியது.

ஜனாதிபதி உரையின் பெரும்பகுதியில், தற்போதைய அபிவிருத்தி, எதிர்கால அபிவிருத்தி, அரசாங்கத்தின் புள்ளிவிபர கணக்குகள் சொல்லி 69 நிமிட நிறைவில் நன்றி கூறி முடித்துக் கொண்டார்.

பாமர மக்களுக்கு இதில் என்ன புரிந்திருக்கும், எதனை எடுத்துக் கொண்டார்கள் என்பது தெரியாது. ஆனால், தன் தலை தப்பினால் போதும் என்ற தொனியே அந்த உரையில் தென்பட்டது.

நாடு இப்படியொரு நெருக்கடியில் இருக்கும்போது ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் என்றால், அது எவ்வளவு முக்கியமானதாக, பயனுள்ளதாக, மக்களுக்கு நம்பிக்கைத் தரக்கூடியதாக இருக்க வேண்டும்?. ஆனால் அப்படியொன்றையுமே ஜனாதிபதியின் உரையில் காண முடியவில்லை.

உரையைப் பார்த்த அனைவரும் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஜனாதிபதி அல்லது அரசாங்கத்தின் மீதான கோபம் அல்ல. ஏமாற்றத்தினால் ஏற்பட்ட கோபம்.

“நான் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், சிலர் தமது தனிப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி, அரசாங்கத்துடன் கோபத்தில் உள்ளனர். அவர்கள் தற்போது அரசாங்கத்தை விமர்சிக்கிறார்கள். அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது என்ற கருத்தை மக்களிடம் கொண்டுசெல்ல முயற்சிக்கிறார்கள். எவ்வாறாயினும், எனக்குத் தேவையான சிலரை மகிழ்விப்பதற்காக, எனது கொள்கையை மாற்றிக் கொள்ள முடியாது.” என்று அவர் கூறுகின்றார்.

ஆனால், மரண தண்டனைக் கைதியொருவருக்கு பொது மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதியின் செயல், யாரை மகிழ்விப்பதற்கான செயல் என்பதே கேள்வி.

ஒரு நல்லவிடயம் கூட இருக்கவில்லையா?

ஜனாதிபதியின் உரையில் ஒரேயொரு நல்ல விடயத்தை மட்டும் அவதானிக்க முடிந்தது. இயற்கை உரப் பாவனை. ‘விசமற்ற உணவை இலங்கையில் விளைவிப்போம்’ என்ற ஜனாதிபதியின் திட்டம் வரவேற்கத்தக்கது.

இயற்கை விவசாயத்தால் இலங்கையின் தரத்தை உலகக்கு எடுத்துக் காட்ட முடியும். இதனால் உலக அளவில் புதிய சந்தைவாய்ப்பை உருவாக்க முடியும். இதுகுறித்து ஜனாதிபதி தனது உரையில் பேசியிருந்தார். இது சாத்தியமானதுதான்.

தமிழகத்தில் தற்போது இயற்கை விவசாயம் மீதான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. உலகிலும் இயற்கை உற்பத்திகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. ஆனால், இலங்கையில் திட்டமில்லாத பயணத்தால் இருப்பதை இழந்து நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. ”எமக்கு திட்டம் இருக்கிறது. அதன்படியே பயணிக்கிறோம்.” என்று ஜனாதிபதி ஆரம்பித்திருந்தார். ஆனால் அப்படி திட்டமிருப்பதாகத் தெரியவில்லை.

இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதும், அதனை ஊக்குவிப்பதும் எவ்வளவு முக்கியமானது என்பதை அறிவோம். இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகள், மக்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். ஏற்கனவே இரசாயன உரங்களைப் பயன்படுத்தி மண் மடிந்துபோயுள்ளது. அதனை உயிர்ப்பிக்க வேண்டும். அதற்கு உரிய கால அவகாசம் கொடுக்க வேண்டும். இயற்கை உரங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும். மண்புழு குறித்த விழிப்புணர்வை மக்கள், விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இது நீண்ட, நெடிய சவால் மிக்க பயணம்.

இரசாயன உரத்தை இவ்வளவு காலமும் பயன்படுத்திவிட்டு, திடீரென அதனை நிறுத்தி, இயற்கை உரத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதால் எதிர்பார்த்த விளைச்சலை அடைய முடியுமா?. ஏற்கனவே பூமி செத்துப் போயுள்ளது. அதனை உயிர்ப்பிக்க வேண்டும். இதற்கான திட்டங்களை அமுல்படுத்த வேண்டும். இதுகுறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் இயற்கை உரத்தை விவசாயிகளுக்குத் திணித்து, அதில் உரிய பயனற்றுப் போன பின்னர், மக்களும் விவசாயிகளும் இயற்கை விவசாயம் மீதான நம்பிக்கையை இழந்துவிடுவார்கள். இதில் கவனமாக செயற்பட வேண்டும். ஆனால் இதுகுறித்த துறைசார் அறிவோ, தேடலோ விவசாய அமைச்சருக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

ஜனாதிபதி தனது உரையில் சொன்ன ஒரேயொரு சிறந்த திட்டமான இயற்கை விவசாயத்திற்குக் கூட அரசாங்கத்திடம் சரியான வழிமுறைகள் இல்லை.

‘சிஸ்டம் சேஞ்ச்’ என்ற கோசத்துடன் ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கத்திற்கு, தடுப்பூசிகளை ஏற்றுவதற்குக் கூட ஒரு சிஸ்டத்தை உருவாக்கத் தெரியவில்லை. மணிக்கணக்கில், கால்கடுக்க மக்கள் காத்திருந்தும் தடுப்பூசி கிடைக்காமல் வீடு திரும்பியோர் உள்ளனர். தடுப்பூசி வரிசைகளில் குழாயடிச் சண்டைகளைப் பார்க்க முடிந்தது.

குறைந்தபட்சம் ஜனாதிபதியின் உரையின்போது ஒளிப்பதிவு, ஒளிபரப்பு ஒழுங்குகளைக் கூட திட்டமிட முடியாமல் குளறுபடி செய்திருப்பதை அவதானிக்க முடிந்தது. ஏற்கனவே ஒளிபதிவுசெய்யப்பட்ட உரை, சமூக வலைத்தளத்தில் நேரலை என்று ஒளிரப்பானது. இரவு நேர உரை, சூரியன் உச்சியில் இருந்தபோது ஒளிப்பதிவு செய்யப்பட்டது. இதை மூடிய அறையில் செய்திருந்தால்கூட குறையில்லாது இருந்திருக்கும்.

ஜனாதிபதி ஏதாவது ஒரு நம்பிக்கை வார்த்தையை சொல்வார் என்ற ஏக்கத்தில் இருந்த மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமல்ல எரிச்சலும் ஏற்பட்டது.

வரும் கப்பல்கள் மட்டுமல்ல மக்களின் வயிறுகளும் பற்றி எரிகின்றன. ஆனால் தான் செய்த நல்ல விடயங்களை யாரும் பேசுவதில்லை என்று கடிந்துகொண்ட ஜனாதிபதி கோடாபய ராஜபக்ச, தன்சார் கூட்டத்திற்கு மாத்திரம் பிடில் வாசித்துக் கொண்டிருக்கிறார். ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் வாசித்ததுபோல…

  • நன்றி tamilinfo.ch

Related Articles

Latest Articles