இலங்கையில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள புதிய அரசாங்கம் தொடர்பில், பாரிய நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க் என்ட்ரூவுக்கும் வெளி விவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று வெளிவிவகார அமைச்சில் இடம் பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போதே ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் ஐக்கிய நாடுகள் சபை மூலம் முக்கியமான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன் அதற்கு இலங்கையின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். உயிர் பல்வகைமை மாநாடு, சமுத்திரவியல் மாநாடு, காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு, சமூக அபிவிருத்தி தொடர்பான மாநாடு மற்றும் பெண்கள் உரிமை தொடர்பான மாநாடு ஆகியவை, இதில் உள்ளடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மறைக்கப்பட்டுள்ள சொத்துக்களை இனங்காணும் செயற்றிட்டத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக உள்ளதாகவும் அவர் வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
நியூ யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானத்தைக் கட்டி யெழுப்பும் ஆணைக் குழுவுடன் இலங்கை நெருக்கமாக செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதி இதன் போது தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்துடன் இலங்கை கடற்பரப்பில் வைத்து காப்பாற்றப்பட்டுள்ள ரோஹிங்கிய அகதிகளுக்கு மனிதாபிமான ரீதியில் வழங்கும் சேவைகள் தொடர்பில் அவர் இலங்கை அரசாங்கத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் இந்த வருடத்தின் இறுதியில், இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
