நாட்டில் தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலைக்கமைய நால்வரடங்கிய குடும்பமொன்றுக்கு மாதாந்த உணவு தேவைக்கே 60 ஆயிரம் ரூபாவுக்கு மேல் தேவை. இதர அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும், மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட கட்டணங்களுக்காகவும் மேலதிக செலவும் ஏற்படும். ஆக மாதம் 70 ஆயிரம் ரூபாவரை இருந்தால்தான் ஓரளவுக்கு நிம்மதியாக வாழ முடியும்.
ஆனால் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு தற்போது ஆயிரம் ரூபாவே வழங்கப்படுகின்றது. சில தோட்டங்களில் மாதமொன்றுக்கு 20 நாட்களுக்கும் குறைவாகவே வேலை வழங்கப்படுகின்றது. இதன்படி 20 நாட்கள் வேலைக்கு சென்றால் 20 ஆயிரம் ரூபா சம்பளம் பட்டியலில் விழும். இதில் முற்பணக் கொடுப்பனவு, இதர கட்டணங்கள் கழிய கைக்கு 16 ஆயிரம் ரூபாவரைதான் கிடைக்கும். இந்த தொகையை வைத்து எப்படி வாழ்வது? குடும்பமொன்றில் குடும்ப தலைவனும், தலைவியும் வேலைக்கு சென்றால்கூட 35 ஆயிரத்துக்குள்தான் மாத வருமானம் இருக்கின்றது.
உணவு தேவையை பூர்த்தி செய்வதற்கே இந்த தொகை போதாது, மலையக பெருந்தோட்டப்பகுதிகளில்தான் போசாக்கு மட்டம் குறைவாக இருக்கின்றது. இந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு எவ்வாறு சத்துணவுகளை உண்பது?
மலையக பெருந்தோட்ட மக்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பது பற்றியும், மலையக மறுமலர்ச்சி பற்றியும் அதிகம் பேசப்படுகின்றது. கடந்த காலங்களில் பெருமெடுப்பில் மலையகம் – 200 என விழாக்கள்கூட நடத்தப்பட்டன. மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை நிலை மேம்பட வேண்டும், அங்கு சமூக மாற்றமொன்று ஏற்பட வேண்டும் என்ற நோக்கிலேயே இவ்வாறான நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இந்த இலக்கை அடைய வேண்டுமெனில் – அதற்கான பயணப்பாதையின்போது இந்த சம்பளப் பிரச்சினைக்கும் உரிய தீர்வு அவசியம். முதலில் பொருளாதார ரீதியிலான பாதுகாப்பு வலயமொன்றை உருவாக்கினால்தான் நிச்சயம் அடுத்தக்கட்டம் நோக்கி இலகுவில் பயணிக்க முடியும்.
90 காலப்பகுதியில் மலையக பெருந்தோட்ட நிறுவனங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னரே கூட்டு ஒப்பந்த முறைமை பெருந்தோட்டத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஈராண்டுகளுக்கு ஒருமுறை தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. பொருளாதார சூழ்நிலை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டு காலத்துக்கேற்ற வகையில் நியாயமான சம்பளத்தை வழங்கும் நோக்கிலேயே ஈராண்டு என்ற காலப்பகுதி நிர்ணயிக்கப்பட்டது. சம்பளத்துக்கு மேலதிகமாக தொழிலாளர்களின் நலன்சார் விடயங்களும் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளன.
ஆனாலும் கூட்டு ஒப்பந்தம் அமுலில் இருந்த காலப்பகுதியில்கூட சம்பளத்தைதவிர இதர சலுகைகள் தோட்ட நிர்வாகங்கள் வழங்கவில்லை. தொழிற்சங்கங்களை வளைத்துபோட்டுக்கொண்டு அற்ப சம்பள உயர்வே வழங்கப்பட்டது. கூட்டு ஒப்பந்தம் அமுலில் இருந்த காலப்பகுதி முதல் நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட்டிருந்தால் இந்நேரம் நியாயமான தொகை கிடைக்கப்பெற்றிருக்கும்.
தற்போது கிடைக்கப்பெற்றுள்ள ஆயிரம் ரூபா சம்பளத்தைக்கூட பல போராட்டங்களுக்கு மத்தியிலேயே பெற நேரிட்டது. அதுவும் பெருந்தோட்டக் கம்பனிகள் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகின. இதனால் சம்பள நிர்ணயசபை ஊடாகவே சம்பளம் தீர்மானிக்கப்பட்டது.
இம்முறைகூட சம்பள நிர்ணயசபை ஊடாகவே சம்பளத்தை நிர்ணயிப்பதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. சம்பள நிர்ணயசபை கடந்த 10 ஆம் திகதி கூடியபோது முதலாளிமார் சம்மேளனம் அதில் பங்கேற்கவில்லை.
இதனால் எதிர்வரும் 24 ஆம் திகதி சம்பள நிர்ணயசபை மீண்டும் கூடவுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன. எனினும், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் நாளொன்றுக்கு 2 ஆயிரம் ரூபா அவசியம், எனவே, ஆயிரத்து 700 என்பது தொழிலாளர்களைக் காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையாகும் என சம்பள நிர்ணயசபைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஜே.வி.பியின் தொழிற்சங்க விளையான அகில இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சம்பள உயர்வு குறித்து அரசு அக்கறை கொண்டுள்ளது என தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார கூறுகின்றார். ஆனால் அரச பெருந்தோட்ட நிறுவனங்களின்கீழ் உள்ள தொழிலாளர்களுக்குகூட இன்னும் சம்பள உயர்வு இல்லை. அதுமட்டுமல்ல சில தோட்டங்களில் ஈபிஎப், ஈடிஎப் கொடுப்பனவுகள்கூட முறையாக செலுத்தப்படவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
இது தேர்தல் வருடம் என்பதால் தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் அதுவும் இழவு காத்த கிளியின் கதைதான்போதும்…
மலையக பெருந்தோட்ட தொழில்முறையில் மாற்றம் அவசியமெனில் நாட்கூலி முறைமை மாற வேண்டும், மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்பட வேண்டும். அதனை நோக்கிய நகர்வு அவசியம். அதற்கான ஏற்பாடுகள் இடம்பெறும்வரை தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்.