இஸ்ரேல் தாக்குதலில் கர்ப்பிணி பெண் உட்பட 22 பேர் பலி: காசாவில் தொடரும் பேரவலம்!

காஸாவின் ரபா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில், அறுவை சிகிச்சைமூலம் அவரது குழந்தை வெளியில் எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா முனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 34 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் ரபா நகரில் நேற்று இரவு இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.இதில் 22 பேர் உயிரிழந்தனர்.
பலியானவர்களில் கர்ப்பிணி, அவரது கணவர், 3 வயது குழந்தை ஆகியோரும் அடங்குவர். உயிரிழந்த கர்ப்பிணியான சப்ரீன் அல்-சகானி 30 வார கால கர்ப்பமாக இருந்தார்.

அவரது வயிற்றில் இருந்து குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்து வைத்தியர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தனர். பின்னர் அந்த பெண் குழந்தையை ‘இன்குபேட்டரில்’ வைத்து பராமரித்து வருகிறார்கள்.

குழந்தையின் மார்பின் குறுக்கே டேப்பில் தியாகி சப்ரீன் அல்-சகானியின் குழந்தை என்று எழுதப்பட்டிருந்தது. 1.4 கிலோ எடையுள்ள குழந்தை, அவசரகால பிரிவில் பிரசவிக்கப்பட்டு உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருகிறது.

குழந்தை மூன்று முதல் நான்கு வாரங்கள் வைத்தியசாலையில் இருக்கும் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles