இஸ்ரேல் பிரதமரின் வீட்டை இலக்குவைத்து ட்ரோன் தாக்குதல்!

லெபனானில் இருந்து இஸ்ரேலின் சிசேரியா நகரை நோக்கி இன்று (சனிக்கிழமை) ட்ரோன் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. பிரதமர் நெதன்யாகுவின் இல்லத்தை குறிவைத்து இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ட்ரோன் ஒன்று சிசேரியாவில் உள்ள கட்டிடம் ஒன்றை சேதப்படுத்தி உள்ளது, ஆனால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் செய்தித் தொடர்பாளர், சிசேரியாவில் உள்ள நெதன்யாகுவின் வீட்டை நோக்கி ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை பின்னர் உறுதி செய்தார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் தாக்குதலின் போது நெதன்யாகு வீட்டில் இல்லை என்றும் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இதனிடையே மேலும் இரண்டு ஆளில்லா விமானங்கள் இடைமறிக்கப்பட்டதாகவும், வடக்கு டெல் அவிவில் உள்ள கிலிலோடில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டன என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வர், புதன்கிழமை நடந்த மோதல் ஒன்றில் கொல்லப்பட்டார். வியாழக்கிழமை அவரின் உயிரிழப்பை இஸ்ரேல் அறிவித்தது. இது நடந்து சில நாட்களுக்கு பின்பு லெபனானில் இருந்து இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, ஈரானின் தேசிய தலைவர் அயதுல்லா செயத் அலி காமேனி, சின்வரின் மரணம் எதிர்ப்பின் அச்சினைத் தடுத்து நிறுத்தாது என்றும் ஹமாஸ் நீடித்திருக்கும் என்றும் சனிக்கிழமை கூறியுள்ளார். அவர் கூறுகையில், “யாஹியா சின்வரின் இழப்பு சந்தேகத்துக்கிடமின்றி எதிர்ப்பின் அச்சுக்கு மிகவும் வேதனையான ஒன்றுதான். அது இந்த முன்னணியைத் தடுத்து நிறுத்த முடியாது. முன்னணித் தலைவர்களின் தியாகத்துடன் இது தொடர்ந்து முன்னேறும். ஹமாஸ் நீடித்திருக்கிறது, நீடித்திருக்கும்.” என்று தெரிவித்திருந்தார்.

ஈரானின் ஆதரவுடன் பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட எதிர்ப்பின் அச்சு என்பது ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லாக்கள், யேமனின் ஹ_திகள் மற்றும் சிரியா, ஈராக்கின் ஷியா குழுக்களை உள்ளடக்கியது. இவர்கள் மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்க்கின்றனர்.

Related Articles

Latest Articles