ஈரான்மீது தீவிர தாக்குதலை மேற்கொண்டுள்ளது இஸ்ரேல் இராணுவம். இதில், ஈரான் நாட்டின் அரசு தொலைக்காட்சி ஊடக நிறுவனமான ஈரானின் இஸ்லாமிய குடியரசு நியூஸ் நெட்வொர்க் அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலின்போது கட்டிடம் அதிர்ந்து கறும்புகை எழுந்தது, அந்த தொலைகாட்சி நிறுவனத்தின் ஸடூடியோவில் நேரலை நிகழ்ச்சியில் பதிவானது.
முன்னதாக, இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஈரானின் அரசு ஊடகத்துக்கு சொந்தமான தொலைகாட்சி, வானொலி நிலையம் அழிக்கப்படும் என கூறி இருந்தது கவனிக்கத்தக்கது.
இதனிடையே, ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பை தாக்கி அழிக்கும் வகையில் தெஹ்ரானில் உள்ள பொது மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்திருந்தது. இதையடுத்து அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.
திங்கட்கிழமை அன்று நேரலையில் தொகுப்பாளர் ஒருவர் ஈரான் அரசு தொலைக்காட்சிக்காக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதையடுத்து அந்த தொகுப்பாளர் தாக்குதலில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் வகையில் செயல்பட்டார். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தெஹ்ரானில் உள்ள அந்த அலுவலகம் மோசமாக சேதமடைந்தது.
ஈரான் செய்தி தொலைக்காட்சி அலுவலகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக அந்தச் செய்தி நிறுவனத்தின் ஒளிபரப்பு சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. ‘உண்மையின் குரலை ஒடுக்கும் முயற்சி’ என இஸ்ரேலை குற்றம்சாட்டி மீண்டும் ஒளிபரப்பு தொடங்கியது.