அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகியவை உக்ரைனுக்கு இன்னும் கூடுதலான ஆயுதங்களை வழங்க உறுதி அளித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருடன் நட்பு நாடுகளைச் சேர்ந்த ஏனைய தலைவர்களும் வீடியோ தொழில்நுட்பம் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ரஷ்யப் படையெடுப்பு புதிய கட்டத்தை அடைந்துள்ளதாக அவர்கள் கூறினர்.
கடந்த வாரம் அறிவித்ததுபோன்று, அமெரிக்கா உக்ரைனுக்கு மீண்டும் 800 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ நிவாரண உதவித் திட்டத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தத் திட்டம் கைகூடினால், இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா 3 பில்லியன் டொலருக்கு மேல் உதவி வழங்கியுள்ளது.
பிரிட்டன் பிரதமர் ஜோன்சன், உக்ரைனுக்குக் கூடுதல் இராணுவ ஆயுதங்கள் தேவைப்படுவதாகக் கூறினார். கனடியத் தரப்பிலிருந்து, கனரகப் போர் வாகனங்கள் அனுப்பப்படும் என்று ட்ரூடோ தெரிவித்தார்.