உக்ரைன் ஜனாதிபதிக்கும், இந்திய பிரதமருக்கும் இடையில் தொலைபேசி மூலம் உரையாடல் இடம்பெற்றுள்ளது.
உக்ரைன் நாட்டுக்கு எதிராக ரஷ்ய போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேலாகின்றது.
இந்நிலையில் இரு நாடுகளிடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக அலாஸ்காவில் வருகிற 15 ஆம் திகதி ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் ட்ரம்ப் நேரடி பேச்சில் ஈடுபடவுள்ளார்.
இந்த சூழலில், உக்ரைன் ஜனாதிபதியை, பிரதமர் மோடி தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு நேற்று கலந்துரையாடினார்.
இதன்போது உக்ரைன் மக்களுக்கான தனது ஆதரவை வழங்கியதுடன், போரை விரைவாகவும், அமைதியான முறையிலும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கூறினார்.
இந்நிலையில், ஜெலன்ஸ்கி வெளியிட்டு உள்ள செய்தியில், பிரதமர் மோடியுடன் நீண்ட நேரம் உரையாடினேன். இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் ஒட்டுமொத்த உறவுகள் என முக்கிய விசயங்களை பற்றி விரிவாக ஆலோசித்தோம். உக்ரைன் மக்களுக்கு ஆதரவான வார்த்தைகளை பேசியதற்காக நான் பிரதமர் மோடிக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன்.
வருகிற செப்டம்பரில் ஐ.நா. பொது கூட்டத்திற்கான சந்திப்பின்போது, தனிப்பட்ட முறையில் இருவரும் சந்தித்து பேசுவது என முடிவு செய்து இருக்கிறோம். இருவரும், பரஸ்பர நாடுகளுக்கான சுற்றுப்பயணம் மேற்கொள்வது பற்றியும் பேசவுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே பதற்றம் அதிகரித்து காணப்படும் சூழலில், மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பணியில் அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் முயன்று கொண்டிருக்கும் சூழலில் இந்த உரையாடல் நடந்துள்ளது.
ரஷியா மற்றும் உக்ரைன் என இரு நாடுகளுடனும் நட்புறவை வலுப்படுத்தி வருவதுடன், அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் என கூறி, சமநிலையிலான அணுகுமுறையை இந்தியா மேற்கொண்டு வருகிறது.