கடந்த 2022-ல் ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக உக்ரைன் நாட்டின் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைப் பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய தாக்குதலை உக்ரைன் விமானப் படை உறுதி செய்துள்ளது.
ஆனால், எந்தவிதமான விதமான ஆயுதங்கள் இருந்தன என்பதைப் பற்றி குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை. ரஷ்யாவின் அஷ்ட்ராகன் பகுதியிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது என்று உக்ரைன் விமானப் படை டெலிகிராம் செயலியில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, உக்ரைன் முதன்முறையாக அமெரிக்க, பிரிட்டிஷ் ஏவுகணைகளை ரஷ்ய எல்லைக்குள் ஏவி தாக்குதல் நடத்தியிருந்தது. இதற்கு பதிலடியாக ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உக்ரைனுக்குள் ஏவியுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐசிபிஎம் (ICBM) ரக ஏவுகணைகள் அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்குதல் நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டவை ஆகும். இந்நிலையில், இந்த ரக ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியுள்ளது போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்க அனுமதியால்… – கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது 1000 நாட்களையும் கடந்து போர் நீடித்து வருகிறது. ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவி வழங்கி வந்தன. நீண்ட தூரம் சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி இருந்தது.
எனினும், இந்த ஏவுகணைகளைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் முடிவடைய நிலையில், தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு பைடன் அனுமதி வழங்கினார்.
இந்த ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தும்பட்சத்தில், உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்கமாட்டோம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்தது. இதற்கேற்ப தன் அணு ஆயுதக் கொள்கையில் ரஷ்யா மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதன்படி, அணு ஆயுதம் இல்லாத நாடு (உக்ரைன்), அணு ஆயுதம் வைத்திருக்கும் நாட்டுடன் (அமெரிக்கா) கூட்டணி வைத்து ரஷ்யா மீது போர் தாக்குதல் மேற்கொண்டால், பதிலுக்கு அந்நாட்டின் மீது ரஷ்யாவும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவில் தயாரான நீண்டதூரம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணை மூலம் உக்ரைன் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியது. இது தங்கள் நாட்டின் பிரியான்ஸ்க் நகரில் உள்ள ஆயுதக் கிடங்கை தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதையடுத்து, கீவ் நகரின் மீது வான் வழி தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதனால், கீவ் நகரில் உள்ள தங்கள் நாட்டு தூதரகத்தை அமெரிக்கா நேற்று மூடியது. அத்துடன் தூதரக ஊழியர்கள் மற்றும் உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் நாடுகளும் கீவ் நகரில் உள்ள தங்கள் நாட்டு தூதரகங்களை நேற்று மூடின.
இந்நிலையில், கடந்த 2022-ல் ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக உக்ரைன் நாட்டின் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைப் பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது. உக்ரைன் விமானப் படை இதனை உறுதி செய்துள்ளது.