ரஷ்யா தொடுத்த போரில் உக்ரைன் நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது. போரின் தாக்கத்தால் ரஷ்யாவும் பொருளாதார பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இந்தப் போர் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் கோதுமை, பார்லி, சோளம், சமையல் எண்ணெய் ஆகிய உணவுப் பொருள் ஏற்றுமதியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் முக்கியப் பங்கு வகித்து வந்தன. இந்தப் போரினால் குறித்த உணவுப் பொருட்களின் ஏற்றுமதிகள் தடைப்பட்டுள்ளன. இந்த உணவுப் பொருளை இறக்குமதி செய்யும் நாடுகளில் தற்போது உணவுத் தட்டுப்பாடும், உணவுப் பொருள் விலையேற்றமும் ஏற்பட்டுள்ளன. இந்தப் போரினால் எரிபொருள் விலையும் விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் பணவீக்கத்துக்கு இதுவும் காரணமாக அமைந்தது.
ஆசியாவில் இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. இதனைத்தவிர ஆசிய நாடுகள் அனைத்திலும் ரஷ்ய – உக்ரெய்ன் போர் பாதிப்பை ஏற்படுத்தியது. சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்தத் தாக்கத்தைப் பார்க்கக் கூடியதாக இருந்தது.
ஆனாலும், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் இதனை திறம்பட நிர்வகித்தன. தொடர்ந்தும் நிர்வகித்து வருகின்றன. குறிப்பாக இந்தியா இந்த சூழ்நிலையை வெற்றிகரமாக கையாண்டுள்ளது என்றே கூற வேண்டும். அத்துடன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் தொடர்கிறது.
ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே கணித்ததை விட கூடுதலாக இந்தியாவின் பொருளாதார சரிவு இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியிருந்தது.
உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, குறிப்பாக பெரிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி இறங்கு முகத்தில் இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்தது. அதன்படி இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2%-த்தில் இருந்து 0.8% குறையும் என்று கணிக்கப்பட்டது. ரஷ்யா – உக்ரெய்ன் இடையிலான போர் இந்த சரிவுக்குக் காரணம் என்று சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியது.
இந்த போர் மிகப்பெரிய அத்தியாவசிய தேவைகளை உருவாக்கி உள்ளது என்றும் இதனால் தேவைகள் உலகளாவிய அளவில் 35% வரை உயரலாம் என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் வர்த்தகம், நிதி மற்றும் பொருள் சந்தையில் பண வீக்கம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆசிய மண்டலத்தில் இந்தியா, ஜப்பானின் பொருளாதாரம் குறிப்பிடும்படியான சரிவை சந்திக்கும் என்றும் இதற்கு குறைவான நிகர ஏற்றுமதி நலிந்து போன உள்நாட்டுத் தேவைகள், உச்சபட்சமான எரிபொருள் விலை உயர்விற்கு காரணமாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. சீனாவிலும் இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி சரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய – உக்ரெய்ன் போரினால் உலக நாடுகளில் ஏற்பட்ட பணவீக்கம் ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இல்லை என்றும், உக்ரைன் போர் கண்ணோட்டத்தில் இந்தியாவின் பொருளாதாரம் மீட்பு நிலையை அடைந்து கொண்டு இருக்கிறது என்றும் இந்திய நிதியமைச்சர் தெரிவித்திருந்தார்.
இப்படிச் சொல்வதற்குக் காரணம், ரஷ்ய – உக்ரெய்ன் போரினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட நாடுகள் அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வரும் நிலையில், இந்தியா வேகமாக அதில் இருந்து மீண்டுவிட்டது.
இந்தியப் பொருளாதாரம் குறித்து அண்மையில் பேசிய இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இத்தனைப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் 7 சதவீதத்துக்கும் குறைவான பணவீக்கமே ஏற்பட்டது என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
”பணவீக்கம் ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இல்லை. உக்ரைன் போர் கண்ணோட்டத்தில் இந்தியாவின் பொருளாதார மீட்சி நிலையானது, ஏற்றுமதிகள் தற்போது மீட்பு நிலையை அடைந்து கொண்டு இருக்கிறது. பெப்ரவரி மாதம் ஏற்றுமதி வளர்ச்சி பரவலாக மாறாமல் இருந்தது. ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 25.1 சதவீதம் வளர்ச்சியடைந்தது” என்று இந்திய நிதியமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதத்தையும் இந்திய மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்திய 2025ஆம் ஆண்டு 5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்டுவதற்கு இந்திய அரசு உழைக்கிறது என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
ரஷ்ய – உக்ரெய்ன் போரினால் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பிரான்சில் தற்போது எரிபொருளுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. வாழ்க்கைச் செலவு விண்ணைத் தொட்டுவிட்டதாக பொதுமக்கள் வீதிகளுக்கு வந்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.
ஐரோப்பாவில் பலம்பொருந்திய பிரான்ஸ் போன்ற நாடுகள் திண்டாடும்போது, இந்தியா தனது பொருளாதாரத்தை சீராக கையாண்டு இந்த நெருக்கடி நிலையை சமாளித்து வருகிறது. ரஷ்ய – உக்ரெய்ன் போரினால் உள்நாட்டில் ஏற்பட்ட பாதிப்புக்களை அனைத்து நாடுகளும் பட்டியல் இடுவதை மறுப்பதற்கில்லை. ஆனால், இலங்கை, பாகிஸ்தான் போன்று அந்த நெருக்கடியில் மூழ்கிவிடாமல் நிலைமையை சமாளிப்பது என்பதே வெற்றியாகும்.
இந்த வெற்றியுடன் பொருளாதார வளர்ச்சியையும் தக்கவைத்துக் கொண்டு, 2025ஆம் ஆண்டில் புதிய இலக்குகளை வகுத்து அதை நோக்கிப் பயணிப்பது என்பது மிகப் பெரிய சவாலாகும். அந்தச் சவாலை இந்தியா ஏற்றுள்ளது. ரஷ்ய – உக்ரெய்ன் போரினால் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகள் தனது பலத்தை இழக்கும். இது ஆசியாவிற்கு பெரும் வாய்ப்பாக அமையும் என்று இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த வாய்ப்பை இந்தியா மிகத் திறமையாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. ஆசியாவில் மட்டுமல்ல அடுத்த சில தசாப்தங்களில் இந்தியா உலக அளவில் பலம்பொருந்திய நாடாக வலம் வருவதற்கான பயணத்தை தற்போதே ஆரம்பித்துள்ளதாகவே தெரிகிறது.