தமிழ் மக்களின் உரிமைகளிலோ, சலுகைகளிலோ கைவைக்க இடமளிக்கப்போவதில்லை என பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளரும், பதுளை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
19ஆவது அரசியலமைப்பை நீக்கி, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள விசப் பற்களைப் பிடுங்க மக்கள் பலத்தை வழங்க வேண்டும் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதனைக் கண்டித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘நாட்டில் நலுக்காக அரசியல் அமைப்பில் மாற்றம் செய்வதை நாம் எப்போதும் வரவேற்போம். ஆனால், தமிழ் மக்களின் உரிமைகளிலோ, சலுகைகளிலோ கைவைக்க இடமளிக்கமாட்டோம். உங்களுக்கு விசமாக தெரிவது எங்களுக்கு அமர்த்தமாக இருக்கும். உங்களின் கருத்துக்களை மட்டும் முன்வைத்து முடிவுகளை எடுக்க இது உங்களின் அரசாங்கம் மட்டுமல்ல.
இது எங்களின் அரசாங்கமும் கூட. நீங்கள் ஆதரவளிக்கும் அனைத்தையம் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் எங்களுக்கு கிடையாது. எங்கள் மக்கள் நலன்சார்ந்த விடயங்களில் எவர் தலையிட்டாலும், பலமிக்க அரசியல் பிரதிநிதியாக நாம் நிச்சம் அதனை எதிர்ப்போம். இந்தத் தேர்தலில், உங்களை பெரும்பான்மை மக்கள் எவ்வாறு வெற்றிபெற வைப்பார்களோ, தமிழ் மக்களும் எங்களையும் பெருவாரியாக வெற்றிபெற வைப்பார்கள்.
அரசாங்கத்தின் அதிகாரப் பதவியில் இருந்துகொண்டு ஒருபோதும், அரசியலமைப்பில் எங்களுக்கு அமர்தமாக இருக்கும் விடயங்களை மாற்றுவதற்கு கனவில் கூட செயற்படுத்தவிடமாட்டோம்..” செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.