பெப்ரவரி 16, 1934இல் பிறந்த தெளிவத்தை ஜோசப் இலங்கையின் சிறந்த சிறுகதை மற்றும் நாவலாசிரியராக விளங்குகின்றார். அவர் சிறந்த இலக்கிய ஆய்வாளர் ஆவார். இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவராக இலக்கிய உலகில் போற்றப்படுகின்றார்.
அறுபதுகளில் எழுதத் தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர் அவர்.இலக்கியத்துறைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த எழுத்தாளராக அவர் புகழப்படுகின்றார்.
தெளிவத்தை ஜோசப் பதுளை மாவட்டத்தின் ஹாலி எல இற்கு அருகில் உள்ள ஊவாக்கட்டவளை என்ற இடத்தில் பிறந்தார். மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பாடசாலையில் படித்து விட்டு மீண்டும் இலங்கை திரும்பி பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார்.
இவர் ஆரம்பத்தில் தெளிவத்தை என்னும் தோட்டத்தில் ஆசிரியராக இருந்தவர். இதன் காரணமாகவே தனது பெயருடன் தெளிவத்தையையும் இணைத்துக் கொண்டார். அவரது உயிர் மூச்சே இலக்கியம் ஆகிப் போனது.
‘காலங்கள் சாவதில்லை’ என்பது இவருடைய முக்கியமான நாவல். ‘நாமிருக்கும் நாடே’ சிறுகதைத் தொகுதிக்காக இலங்கையில் சாகித்திய விருது பெற்றுள்ளார். இவரது ‘குடை நிழல்’ என்ற நாவல் 2010 ஆம் ஆண்டுக்கான யாழ் இலக்கிய வட்டத்தின்- இலங்கை இலக்கியப் பேரவை விருதைப் பெற்றுள்ளது. தெளிவத்தை ஜோசப் 2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதைப் பெற்றார். அவரது நூல்களில் சில பின்வருமாறு:
காலங்கள் சாவதில்லை (1974, நாவல், வீரகேசரி வெளியீடு), நாமிருக்கும் நாடே (1979, சிறுகதைகள், வைகறை வெளியீடு), பாலாயி (1997, மூன்று குறுநாவல்கள், துரைவி வெளியீடு), மலையக சிறுகதை வரலாறு (2000, துரைவி வெளியீடு), இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும் (அச்சில், மூன்றாவது மனிதன் வெளியீடு), குடை நிழல் (புதினம், 2010), இலக்கியத்துறைக்கு அப்பால் தெளிவத்தை ஜோசப் அருமையான மனிதர், பண்பாகப் பழகுபவர், பழகுவதற்கு இனியவர். சிறுகதையாளர், நாவலாசிரியர், விமர்சகர், இலக்கிய ஆய்வாளர். இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர் என்பது மட்டுமன்றி ஏராளமான இலக்கிய அன்பர்களை தன்வசம் கொண்டுள்ளவர் அவர்.
அறுபதுகளில் இலங்கையில் ஏற்பட்ட கலை இலக்கிய அரசியல் மாற்ற காலத்தில் எழுதத் தொடங்கியவர். எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர். இலக்கியத்துறையைப் பொறுத்தவரை தனக்கென ஒரு அடிப்படை இலட்சியத்தைக் கொண்டவர்.
மலையகம் என்ற மண்ணுக்கு, அதன் தனித்துவத்திற்கு, அந்த உணர்வுக்கு உருவம் கொடுத்தவர் தெளிவத்தை ஜோசப். தோட்டத்தொழிலில் சிரமத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தொழிலாளிகளின் வாழ்வை படம் பிடித்துக் காட்டும் வல்லமை கொண்டதாக இவரது படைப்புகள் அமைந்துள்ளன.
பிரபல எழுத்தாளராக இருந்தாலும் ஏனைய படைப்பாளர்களின் படைப்புகளை வெளிக்கொணர்வதிலும் தமது பங்களிப்பை வழங்கி வந்துள்ளார். வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் முதல், உறுதியான தடத்தைப் பதித்துக்ெகாண்டவர்கள் வரை அனைவரையும் வெளி உலகிற்குக் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் திரட்டிக் கொடுத்தவர் தெளிவத்தை ஜோசப்.
இலக்கிய செம்மல், கலாபூஷணம், அரச சாகித்திய விருது, சம்பந்தன் விருது, இலக்கிய விருது, இராமகிருஷ்ணா – கமலநாயகி தமிழியல் விருது, தமிழியல் வித்தகர் பட்டம், பாரதி விருது, மக்கள் எழுத்து வேந்தன், இலக்கிய சாதனையாளர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார் தெளிவத்தை ஜோசப்.
பிறந்த நாளை இன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் இலக்கியவாதி தெளிவத்தை ஜோசப் பல்லாண்டு காலம் தேக ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமென தினகரனும் வாழ்த்துகின்றது.
பிரபல எழுத்தாளரான தெளிவத்தை ஜோசப் தனது 88 ஆவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகின்றார். சந்தனசாமி ஜோசப் என்ற
இயற்பெயர் கொண்ட இவர் ‘தெளிவத்தை ஜோசப்’ என்ற பெயரில் இலங்கையில் மாத்திரமன்றி தமிழ் கூறும் உலகெங்கும் நன்கு அறியப்பட்ட எழுத்தாளராவார்.










