உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் பகல்-இரவு டெஸ்டில் மோதவுள்ள இந்தியா – இங்கிலாந்து அணிகள்

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் (புதன்கிழமை) ஆரம்பமாகின்றது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் பகல்-இரவாக (மின்னொளியின் கீழ்) இந்த டெஸ்ட் நடத்தப்படுகிறது. இதற்காக பிரத்யேகமாக மிளிரும் தன்மை கொண்ட இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க்) பயன்படுத்தப்படுகிறது.

ரசிகர்களை ஈர்க்கவும், போட்டியில் விறுவிறுப்பு, சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் நோக்கிலும் பகல்-இரவு டெஸ்ட் போட்டி 2015-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 15 பகல்-இரவு டெஸ்ட் போட்டிகள் அரங்கேறியுள்ளன. எல்லா போட்டியிலும் முடிவு கிடைத்திருப்பது சாதனைக்குரிய அம்சமாகும். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி 8 பகல்-இரவு டெஸ்டில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று தோல்வியே சந்திக்காத அணியாக வலம் வருகிறது.

இந்திய அணி நீண்டகாலமாக பகல்-இரவு டெஸ்டில் விளையாட தயக்கம் காட்டியது. சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் சபை தலைவர் பதவிக்கு வந்ததும், தலைவர் விராட் கோஹ்லியிடம் பேசி சம்மதிக்க வைத்தார். இதன்படி இந்தியா, பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொல்கத்தா ஈடன்கார்டனில் வங்காளதேசத்துக்கு எதிராக மோதியது.

3 நாட்களுக்குள் நிறைவடைந்த இந்த டெஸ்டில் இ்ந்தியா இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிங்க் பந்து டெஸ்டில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை விராட் கோஹ்லி (136 ரன்) பெற்றார்.

இந்தியாவின் 2-வது பகல்-இரவு டெஸ்டை யாரும் எளிதில் மறந்து விட முடியாது. கடந்த டிசம்பர் மாதம் அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டெஸ்டில் இ்ந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதுவும் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 21.2 ஓவர்களில் வெறும் 36 ரன்னில் சுருண்டு டெஸ்டில் மோசமான ஸ்கோரை பெற்றது. ஒரு பேட்ஸ்மேன் கூட இரட்டை இலக்கை தொடாத மோசமான நாளாக அமைந்தது.

இங்கிலாந்து எப்படி?

இங்கிலாந்து அணி இதுவரை 3 பகல்-இரவு டெஸ்டில் ஆடியுள்ளது. அவற்றில் ஒன்றில் வெற்றியும் (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக), 2-ல் தோல்வியும் (ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிராக) தழுவியுள்ளது.

பிங்க் பந்து அதிகமாக ஸ்விங் ஆகும். இதனால் வேகப்பந்து வீச்சாளர்களே வெகுவாக ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். பகல்-இரவு டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் 354 விக்கெட்டுகளும், சுழற்பந்து வீச்சாளர்கள் 115 விக்கெட்டும் அறுவடை செய்துள்ளனர். 21 சதங்கள் பதிவாகியுள்ளன. இதில் பாகிஸ்தானின் அசார் அலி (302 ரன்), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (335 ரன்) முச்சதம் விளாசியுள்ளனர்.

1 லட்சத்து 10 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட பிரமாண்டமான ஆமதாபாத் சர்தார் பட்டேல் ஸ்டேடியம் புதிதாக கட்டப்பட்டது ஆகும். இதனால் ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பதை இன்னும் முழுமையாக வீரர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆடுகளத்தில் வேகப்பந்துக்கு சாதகமான சூழல் காணப்பட்டால் தங்களது கை ஓங்கும் என்று இப்போதே இங்கிலாந்து வீரர் ஜாக் கிராவ்லி கூறியுள்ளார்.

இருப்பினும் உள்ளூர் சீதோஷ்ண நிலையில் இந்திய வீரர்கள் சாதிப்பார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்க இந்த டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் இரு அணிகளும் மல்லுகட்டுவதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

Related Articles

Latest Articles