உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பான யோசனைக்கு எதிராக வாக்களிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகய, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை என்பனவே இந்த முடிவை எடுத்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் தமது நிலைப்பாட்டை நாளை அறிவிக்கவுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த 28 ஆம் திகதி கூடிய விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இது தொடர்பான யோசனை நாடாளுமன்ற நிதிக்குழுவிலும் முன்வைக்கப்பட்டுள்ளது.
நிதிக்குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர் நாளை சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படும்.
நாடாளுமன்றத்தை சனிக்கிழமை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஞாயிறு அன்றும் கூட்ட வேண்டுமா என்பது குறித்து இன்று நடைபெறும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்பின்போதே அதற்கு எதிராக வாக்களிப்பதற்கு எதிரணிகள் தீர்மானித்துள்ளன. எனினும், அதனை நிறைவேற்றிக்கொள்வதற்கான சாதாரண பெரும்பான்மைபலம் அரசு வசம் உள்ளது.