உள்ளக கடன் மறுசீரமைப்பினால் வங்கிக் கட்டமைப்பு உடைந்துவிடும், வைப்பாளர்களின் பணம் இல்லாமல் போகும், ஊழியர் சேமலாப நிதியில் அரசாங்கம் கைவைக்கிறது என்ற பிரசாரங்கள் மக்களை பெரிதும் அச்சம் கொள்ளவைத்துள்ளது. ஆனால் இவையொன்றும் நடக்காது என்று அரசாங்கம் உறுதியாக கூறுகிறது.
உள்ளக கடன் மறுசீரமைப்பை மேற்கொண்டால் மட்டுமே வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பிற்கு செல்ல முடியும் என்று அரசாங்கம் உறுதியாக கூறிவருகிறது. மக்கள் மத்தியில் உள்ள வீணான பயத்தைப் போக்கவும், வங்கிக் கட்டமைப்பைப் பாதுகாக்கவுமே 30ஆம் திகதி வங்கி விடுமுறை வழங்கப்பட்டு கடன் மறுசீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
வங்கிக் கட்டமைப்பிற்கு என்ன நடக்கும்?
வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்டுள்ள கடன்களை அரசாங்கம் தள்ளுபடி செய்யுமாயின், வர்த்தக வங்கிகள் வைப்பாளர்களின் கணக்குகளில் கைவைக்கும். இதனால் வைப்பாளர்களின் பணம் இல்லாமல் போகும் என்பது நிச்சயம். ஆனால் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்யப் போவதில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உறுதியாக தெரிவித்துள்ளார். இதனால் வைப்பாளர்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் உறுதியாக கூறியுள்ளார்.
விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் உள்ளக கடன் மறுசீரமைப்பிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று (29) விசேட செய்தியாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டது. மத்திய வங்கி ஆளுநர், நிதியமைச்சின் செயலாளர், ஜனாதிபதியின் பொருளாதாரம் தொடர்பான சிரேஸ்ட ஆலோசகர் ஆகியோர் உள்ளடங்களாக இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
EPF, ETF பணத்திற்கு என்ன நடக்கும்?
உள்ளகக் கடனில் சுமார் 42 வீதமான கடன் EPF, ETF நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. எனவே, இதனை அரசாங்கம் தள்ளுபடி செய்து, வேலை செய்யும் மக்களின் பணத்தில் கைவைக்கப் போகிறது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரசாரம் செய்துவந்தன. இதற்கும் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பதில் வழங்கப்பட்டது.
நாட்டின் வங்கி கட்டமைப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் கடன் மறுசீரமைப்பு செயற்றிட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் தெரிவித்தார்.
இதனூடாக இலங்கை மத்திய வங்கியினால் விநியோகிக்கப்பட்டுள்ள முறிகள் மற்றும் EPF, ETF உள்ளிட்ட நிதியங்களில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள முறிகள் மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்படும் என்றும் இதன் கீழ் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ள அனைத்து முறிகளையும் புதிய வட்டி வீதத்தின் கீழ் மீள விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
புதிதாக விநியோகிக்கப்பட்டுள்ள முறிகளுக்கு 2025 ஆம் ஆண்டு வரை 12 வீத வட்டி செலுத்தப்படுவதுடன் அதன் பின்னர் 9 வீத வட்டி பெற்றுக் கொடுக்கப்படும்.
புதிய கடன் மறுசீரமைப்பு திட்டத்தினூடாக EPF மற்றும் ETF நிதியங்களின் அங்கத்தவர்கள் தமது பணத்தை பெற்றுக்கொள்வதில் எவ்வித சிக்கல்களும் ஏற்படாது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் EPF, ETF கணக்காளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதை மத்திய வங்கியின் ஆளுநர் உறுதிசெய்துள்ளார்.
உள்ளக கடன் மறுசீரமைப்பு நடக்கவில்லையா? பாதிப்பும் இல்லை?
அரசாங்கம் கூறுவதைப் போல் பாதிப்புகள் இல்லையென்றால் உள்ளக கடன் மறுசீரமைப்பு நடக்கவில்லையா? எவ்வித பாதிப்பும் இல்லையா? என்ற கேள்விகளை எதிர்க்கட்சிகள் முன்வைக்க ஆரம்பித்துள்ளன. இதில் உள்ள பாதிப்புக்கள் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாதிப்புக்கள் என்ன?
50 வீதத்திற்கும் அதிகமாக வரி செலுத்தும் அல்லது பொருளாதாரத்தில் பங்கு வகிக்கும் வங்கிக் கட்டமைப்புகள் பாதுகாக்கப்படும். ஆனால் வங்கிகள் ஈட்டும் இலாபம் குறைக்கப்படும். குறிப்பாக EPF, ETFநிறுவனங்களின் முறிகளுக்கு வழங்கப்பட்ட வட்டி வீதத்தை அரசாங்கம் குறைத்துள்ளது. குறிப்பாக 2025 ஆம் ஆண்டு வரை 12 வீத வட்டி செலுத்தப்படும் என்றும் அதன் பின்னர் 9 வீத வட்டி பெற்றுக் கொடுக்கப்படும். அறிவித்துள்ளன. இதன்மூலம் EPF, ETF உரிமையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஆனால் அந்த நிறுவனங்கள் ஈட்டிவந்த இலாபம் அந்த நிறுவனங்களுக்கு இல்லாமல் போகும். இதனையே அரசாங்கம் செய்துள்ளது. அரசாங்கத்தை நம்பி முதலீடு செய்த முறிகளுக்கு திட்டமிட்ட பலன் அல்லது வட்டி கிடைக்காமல் போகும் என்பதால் அந்த நிறுவனங்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். ஆனால் இவற்றை சீரமைத்துக் கொண்டு மக்களுக்கு அல்லது EPF, ETF உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் வட்டிவீதத்தை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள.
இதில் EPF, ETF உரிமையாளர்களுக்கு 9 வட்டிவீதமே வழங்கப்படும். பணவீக்கத்திற்கு நிகரான பிரதிபலன் EPF, ETF உரிமையாளர்களுக்கு கிடைக்காது. குறிப்பாக பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருக்கும் பட்சத்தில் EPF, ETF உரிமையாளர்களுக்கு தமது வைப்புக்களில் எவ்வித பலனும் இருக்காது. இந்த பாதிப்புக்கள் இருக்கவே செய்யும்.
நீண்ட கால நன்மைகள் என்ன?
உள்ளக கடன் மறுசீரமைப்பு உயிருக்கு போராடும் நோயாளிக்கு கொடுக்கும் கசப்பான மருந்தாக அல்லது வேதனைமிகு சிகிச்சையாகவே பார்க்கப்படுகிறது. இந்த சிகிச்சை அல்லது மருந்தை ஜீரணித்துக் கொள்ளும் பட்சத்தில் அதளபாதாளத்தில் இருந்து மெள்ள மீண்டு வரும் பொருளாதாரம் விரைவில் சீராகும். குறிப்பாக உள்ளக கடன் மறுசீரமைப்பின் மூலம் வங்கி வட்டி வீதங்கள் விரைவில், வெகுவாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய, நடுத்தர முதலீடுகள் அதிகரிக்கும். தொழில்துறைகள் வலுப்பெரும். இதனால் மத்திய, நடுத்தர மக்களுக்கு உழைக்கும் வாய்ப்பு மேலும் கிடைக்கும் என்று பொருளாதார வல்லுநனர்கள் கணித்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் கோசம்!
எதிர்க்கட்சிகள் உள்ளக கடன் மறுசீரமைப்பிற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்துவந்தன. இந்த உள்ளக கடன் மறுசீரமைப்பினால் வங்கிகள் ஆட்டம் காணும், அவை தொழிற்சங்கங்களை வீதிக்கு இறக்கும். மீண்டும் அரசியல் ஸ்திரமற்றத் தன்மை வரும் என்று கணக்குப் போட்டாலும், அவை அனைத்தும் பொய்த்துவிடும் என்ற நிலை வந்துள்ளது.
வரும் சனி, ஞாயிறு தினங்களில் உள்ளக கடன் மறுசீரமைப்பு குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் நடக்கவிருக்கிறது. இதன்பின்னர் உள்ளக கடன் மறுசீரமைப்பிற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் பெறப்படவுள்ளது. உண்மையில் இதற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் தேவையற்ற போதிலும், சட்டரீதியான பிரச்சினைகளைத் தடுக்கவும், போலிப் பிரசாரங்களை உடைக்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையாண்டுள்ள உத்தியாகவே இந்த நகர்வு பார்க்கப்படுகிறது.
பாராளுமன்றத்தில் இதற்கும் அங்கீகாரம் கிடைக்கும் என்றே பரவலாக பேசப்படுகிறது. அதற்குத் தேவையான பெரும்பான்மையை தற்போதைய அரசாங்கம் வைத்திருக்கிறது. இந்த தொங்கு பாலத்தை கடந்த பின்னர், செவ்வாக் கிழமை மீண்டும் வங்கிகள் திறக்கப்படும். வணிக செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் போது, இதன் அதிர்வுகளைப் பார்க்கக் கூடியதாக இருக்கும். சில சமயம் பெரிய அதிர்வுகளுக்கு இடமிருக்காது என்ற கருத்தும் இருக்கிறது.
உள்ளக கடன் மறுசீரமைப்பு என்ற விடயம் மிகவும் சிக்கலான அல்லது தெளிவில்லாத விடயமாக இருந்தாலும் மக்கள் இதனை தேடி அறிந்துகொள்வதும், தெளிவுபெறுவதும் அவசியமாகிறது.