உள்ளாட்சி தேர்தலை மே மாதம் நடத்துமாறு கோரிக்கை!

சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி உள்ளாட்சிசபைத் தேர்தலை மே மாதம் நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திடம், பிவிதுரு ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்படி கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில கூறியவை வருமாறு,

“ உள்ளாட்சிசபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலம் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கை, நாடாளுமன்றத்தில் முன்வைப்பு, வேட்பு மனு கோரல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முடிவடைந்த பிறகு ஏப்ரல் 05 ஆம் திகதியளவிலேயே தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும். ஏப்ரல் 5 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்குரிய சாத்தியமே இல்லை.

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி கூறினாலும், காலப்பகுதியை நிர்ணயிக்கும்போது அரசாங்க தரப்பில் சாதாரணதரப் பரீட்சையை கவனத்தில் எடுக்கவில்லைபோல் தெரிகின்றது.

மார்ச் 15 ஆம் திகதி சாதாரணதரப்பரீட்சை ஆரம்பமாகின்றது. ஏப்ரல் 5 ஆம் திகதிவரை அப்பரீட்சை நடைபெறும். இந்நிலையில் தேர்தல் நடத்தப்பட்டால் பரீட்சைக்கு மத்தியிலேயே தேர்தலும் இடம்பெறும். இது தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும். எனவே, சாதாரணதரப்பரீட்சையை தேர்தலுக்கு மத்தியில் நடத்த வேண்டாம்.

சூறாவளி எச்சரிக்கையால் உயர்தரப்பரீட்சையை பிற்போடுமாறு கோரப்பட்டிருந்தது. எனினும், கல்வி அமைச்சரான பிரதமர், பரீட்சை ஒத்திவைக்கப்படமாட்டாது என அறிவித்தார். இறுதியில் பரீட்சை நடத்தப்பட்டது. புயலும் வந்தது. பரீட்சையை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சாதாரணதரப்பரீப்பரீட்சைக்கும் இந்நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது.

ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் குறித்த அறிவித்தலை விடுத்தால், தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பிறகு வேட்பு மனுக்களைக்கோரி மே முற்பகுதியில் தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும். மாணவர்களின் நலன்கருதி அரசாங்கம் இந்த முடிவை எடுக்க வேண்டும்.” -என்றார்.

Related Articles

Latest Articles