உள்ளாட்சிசபைத் தேர்தலுக்காக பெறப்பட்ட வேட்பு மனுக்களை இரத்து செய்து, புதிதாக வேட்பு மனுக்களை கோருவதற்கு வழிவகுக்கும் சட்டமூலமொன்றை முன்வைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு,
‘ 2023 ஆம் ஆண்டில் நடாத்துவதற்குத் திட்டமிட்டிருந்த உள்ளாட்சி சபைகளுக்கான தேர்தலில் பொறுப்பேற்கப்பட்ட வேட்புமனுப் பத்திரங்களை மீளப் பெறல் மற்றும் புதிய நியமனப் பத்திரங்களைக் கோருவதற்கான ஏற்பாடுகளை வகுப்பதற்காக உள்ளாட்சிமன்ற அதிகாரசபைத் தேர்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கபபட்டது.
இதுதொடர்பாக 2024.11.25 அன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் , 2023 ஆம் ஆண்டில் பொறுப்பேற்கப்பட்ட வேட்புமனுப் பத்திரங்களை இரத்துச் செய்து புதிய நியமனப் பத்திரங்கள் கோரப்பட்டு உள்ளாட்சி சபைகளுக்கான தேர்தல் நடாத்தப்பட வேண்டுமென உடன்பாடு எட்டப்பட்டது.
அதற்கமைய, அனைத்து வாக்காளர்களின் வாக்குரிமை மற்றும் இளைஞர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு நியமனப் பத்திரங்களை சமர்ப்பிக்கும் உரிமையைப் பாதுகாப்பதற்காக தற்போது பொறுப்பேற்கப்பட்டுள்ள உள்ளாட்சி அதிகாரசபைகளுக்கானதேர்தலுக்கான வேட்புமனுப் பத்திரங்களை மீளப் பெறுவதற்கும், புதிய நியமனப் பத்திரங்களைக்
கோருவதற்குமான ஏற்பாடுகளை வகுத்துக் கொள்ளக்கூடிய வகையில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு
அதிகாரம் கிடைக்கும் வகையில் உள்ளுராட்சி அதிகாரசபைத் தேர்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை
அங்கீகாரம் வழங்கியுள்ளது.”- என்றார்.