இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் லெனாட்ஸ் மேல்பிரிவு தோட்டத்தில் இலக்கம் 33 தொடர் குடியிருப்பில் வசித்து வரும் 12 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மாலை பெய்த கடும் மழை காரணமாக சென் லெனாட்ஸ் மேல்பிரிவு தோட்டத்தில் காட்டு லயம் என அழைக்கப்படும் இலக்கம் 33 தொடர் குடியிருப்பின் பின்பகுதியில் உள்ள 30 அடி உயரமான மண்மேடு பகுதி சரிந்து வீழ்ந்துள்ளது.
இதன் காரணமாக இப்பகுதியில் வசித்த 12 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் சென் லெனாட்ஸ் தோட்ட முன்பள்ளி கட்டடத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தங்க வைக்கப்பட்ட 37 பேரில் பத்து சிறுவர்களும் அடங்குகின்றனர். இச் சம்பவத்தில் யுவதி ஒருவர் மண்சரிவில் சிக்கியுள்ளார். அவரை காலில் காயத்துடன் அருகில் உள்ளோர் மீட்டுள்ளனர்.
அதேநேரத்தில் அந்த லயன் குடியிருப்பில் வசிக்கும் 12 குடும்பங்கள் மழைக்காலங்களில் தொடர்ந்தும் இவ்வாறு அச்சத்துடன் வசிப்பதாக தெரிவிக்கின்றனர். சுமார் 07 வருடங்களுக்கு மேல் இப்பகுதியில் வசிப்பதாக தெரிவிக்கின்றனர். இம்முறை மண்சரிவு அனர்த்தத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.தோட்ட நிர்வாகத்திடம் தமது நிலையை எடுத்துரைத்துள்ள போதிலும் மாற்று இடத்தில் பாதுகாப்பாக வாழ இடம் வழங்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் மாவட்ட அரசியல் வாதிகளின் கவனத்திற்கும் இவ்விடயம் கொண்டுவரப்பட்டும் நடவடிக்கைகள் ஏதும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே தொடர்ந்தும் எம்மை பாதுகாப்பான இடத்தில் வீடுகளை அமைத்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்,தலைமைகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










