பலவந்தமாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் எண்ணிமில்லை எனவும், தமது ஆட்சியின்கீழ் அரசியல் பழிவாங்கலுக்கு முடிவுகட்டப்படும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது தம்பி யோசித ராஜபக்ச பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நாமல் கூறியவை வருமாறு,
“அரசியல் பழிவாங்கலுக்காகவும், குடும்பத்தை பழிவாங்கவும் அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாது. சட்டத்தை செயல்படுத்துவதில் பிரச்சினை இல்லை. ஆனால் இலக்கு வைத்து செயற்படுவத்துவதில்தான் பிரச்சினை உள்ளது.
எதிரணியை ஒடுக்கு தமது அரசியல் பயணத்தை
முன்னெடுப்பதற்கே தற்போதைய அரசாங்கம் முயல்கின்றது. நாம் தவறிழைத்திருந்தால் நீதிமன்றம் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கட்டும். அதைவிடுத்து அரசாங்கம் ஊடக கண்காட்சியை நடத்தக்கூடாது.
இந்த அரசுக்கு மக்கள் ஐந்தாண்டுகள் ஆணை வழங்கியுள்ளனர். எனவே, பலவந்தமாக ஆட்சியை மாற்ற முடியாது. தேர்தல் ஊடாகவே அது நடக்கும். அத்துடன், அரசியல் பழிவாங்கலுக்கு எமது ஆட்சியில் முடிவு கட்டப்படும்.” -என்றார்.
