” நான் ஒரு விதை விதைத்தால் அது விருட்சமாகும்வரை என்னால் பாதுகாக்கமுடியும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பொகவந்தலாவையில் இன்று (18) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு உரையாற்றிய ஜீவன் மேலும் கூறியதாவது,
” நான் தோட்டம், தோட்டமாக சென்று அனுதாப வாக்கு கேட்பதாக மாற்றுகட்சி உறுப்பினர்கள் விமர்சிக்கின்றனர். எனது தந்தையின் மறைவால் நான் அழுதேன். பெரும் துயர் சம்பவம்தான். ஆனால், அழுதுகொண்டுசென்று வாக்களிக்குமாறு நான் எங்கும் கேட்கவில்லை. என்ன செய்யப்போகின்றேன் என்பதை மக்கள் மத்தியில் எடுத்துரைத்தே வாக்கு கேட்டு வருகின்றேன். தெளிவான திட்டங்களும், தூரநோக்கு பார்வையும் என்னிடம் உள்ளன.
சின்ன பையனுக்கு என்ன செய்ய முடியும் என நுவரெலியாவிலுள்ள முன்னாள் அமைச்சர் ஒருவர் கேட்கின்றார். பொகவந்தலாவை, டின்சின் பகுதியில் காணி பிரச்சினையொன்று தொடர்பில் கம்பனி வழக்கு தாக்கல் செய்திருந்தது. கம்பனி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி வழக்கை வாபஸ்பெற வைத்தது இந்த சின்ன பையன்தான் என்பதை கூறிவைக்க விரும்புகின்றேன். அதிகாரம் இல்லாமல் என்னால் இவ்வாறு செயற்படமுடியுமென்றால் மக்கள் ஆணை கிடைத்தால் நிச்சயம் சாதிக்கமுடியும். எனவே, ஆதரவை தாருங்கள் மாற்றத்தை ஏற்படுத்திக்காட்டுகின்றேன்.” – என்றார்.
பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்