தன்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இளைஞனை மன்னிப்பதாக மேற்கு சிட்னியில் உள்ள தேவாலயத்தின் ஆயர் Mar Mari Emmanuel தெரிவித்துள்ளார்.
கத்திக்குத்து தாக்குதலின் பின்னர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பில் Mar Mari Emmanuel முதன்முறையாக ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஆயர் நலமாக இருக்கின்றார் எனவும், விரைவில் முழுமையாக குணமடைவார் எனவும் தேவாலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவத்தின் பின்னர் தேவாலய வளாகத்தில் வன்முறை சம்பவம் வெடித்தமை குறித்து கவலை வெளியிட்டுள்ள ஆயர், சட்டம், ஒழுங்கை பின்பற்றுமாறு அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 16 வயது இளைஞன்மீது இன்னும் வழங்கு தொடுக்கப்படவில்லை. அவர் பொலிஸ் பாதுகாப்பின்கீழ் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
இந்நிலையில், “ இச்செயலைச் செய்தவரை நான் மன்னிக்கிறேன், நீ என் மகன், நான் உன்னை நேசிக்கிறேன், நான் எப்போதும் உங்களுக்காக ஜெபிப்பேன் என்பதை அவரிடம் கூறிக்கொள்கின்றேன்.” – என்று ஆயர் கூறினார்.
“ இச்செயலை செய்வதற்கு உங்களை அனுப்பியவர் யாராக இருந்தாலும், நான் அவர்களையும் மன்னிக்கிறேன்.” – எனவும் குறிப்பிட்டுள்ளார்.
