ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை ஐந்து நாட்கள் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கு அமைய ஏப்ரல் 5ஆம் திகதி திங்கட்கிழமை விசேட தினமாக நாடாளுமன்றம் கூடவுள்ளது. அன்று முற்பகல் 10 மணி முதல் மாலை 4 மணி வரை முழுநாளும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரத்தை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்றம் செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.
அன்றையதினம் தேர்தல் முறைமையை மறுசீரமைப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுமை அமைப்பதற்கான பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
அத்துடன், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை ஐந்தாவது நாளாக ஏப்ரல் 7ஆம் திகதி நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, அரசியல் பழிவாங்கள் தொடர்பாக விசாரித்து தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஏப்ரல் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 6ஆம் திகதி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான கட்டளைகள், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைத் திருத்துவதற்கான தீர்மானம் உள்ளிட்ட 8 விடயங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
அன்றையதினம் முற்பகல் 10 மணி முதல் மாலை 4.30 மணிவரை இவை குறித்த விவாதம் நடைபெறவிருப்பதுடன், மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும்.