ஏமாற்றிவிட்டது என்.பி.பி. அரசு: பாடம் புகட்ட அரச ஊழியர்களுக்கு சஜித் அழைப்பு!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு பெரும் ஆணையைப் பெற்றுத் தந்த அரசாங்க ஊழியர்கள், அரசாங்கத்தாலேயே தற்போது கைவிடப்பட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களுடனான இன்றைய சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
” மின்சாரத் துறையை மறுசீரமைப்புச் செய்வதாக கூறி, இன்று 23,000 ஊழியர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளனர். மின்சாரத் துறையில் மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத் துறைகளில் பெரிய அளவிலான மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு, புதிய போட்டி தன்மை வாய்ந்த கட்டமைப்பை நோக்கி நகர்வது அவசியம்.
எனினும் ,இந்த 23,000 தொழிலாளர்களுக்கும் தொழில் பாதுகாப்பையும் சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்யப்பட வேண்டும். தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு உதவிய மின்சார சபை ஊழியர்களை இந்த அரசாங்கம் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.
” மின்சார சபை ஊழியர்களை வீதிக்குக் கொண்டு வந்து, முந்தைய அரசுகளை அசௌகரியங்களுக்கு ஆளாக்கி, அரச ஊழியர்களின் உதவியுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, இன்று மின்சாரத் துறையில் பணிபுரியும் 23,000 அரச ஊழியர்களை மறந்துவிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மின்சாரத் துறையில் பணி புரியும் ஊழியர்கள் இப்போது தாமாக முன்வந்து ஓய்வு பெறலாம் என்றும் மின்சக்தி அமைச்சர் தெரிவித்தார்.
இன்று, கடுவலை நகர சபை தவிசாளர் அப்போது மின்சார சபையின் தொழிற்சங்கத் தலைவராக செயற்பட்டார். மின்சாரத் துறையில் உள்ள ஊழியர்களை தவறாக வழிநடத்தி, வீதிக்கு இறங்க வழிவகுத்து, அதன் விளைவாக, கடுவலை தவிசாளரான நபர் தவிசாளர் பதவிக்கு வந்ததன் பிற்பாடு அவரும் மின்சார சபை ஊழியர்களை மறந்து விட்டு, அவர்களை ஆபத்தில் சிக்க வைத்துள்ளார்.” என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
எனவே, மக்களையும், அரச ஊழியர்களையும் ஏமாற்றிய இந்த அரசாங்கத்திற்கு, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் சரியான பாடம் கற்பிக்குமாறு நான் சகலரையும் கேட்டுக்கொள்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.