ஐயப்ப பக்தர்களின் விமான பயண கட்டணத்தை குறைக்கவும்

பிரதமர் ஹரிணி அமரசூரியவை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் சந்தித்துப் பேசினார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்தச் சந்திப்பில், தலைமன்னார் பகுதியில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் காணிகளில் இருந்தும், பொது இடங்கள், ஆலயங்களுக்குச் சொந்தமான காணிகளில் இருந்தும் அரச படைகள் வெளியேறி மக்களது பாவனைக்காக வழங்க வேண்டும் என்று இதன்போது செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

மேலும், ஐயப்பன் பக்தர்கள் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு யாத்திரையாகப் பயணிப்பதற்கான விமானப் பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., விமானப் பயணக் கட்டணத்தைக் குறைக்குமாறும் கோரினார்.

அத்துடன் கடவுச்சீட்டைப் பெறுவதற்காகப் பக்தர்கள் தமது பயணத்தின் நிமித்தம் கொழும்பு நகருக்கு பல அசௌகரியங்களுக்கு மத்தியில் வந்து, இந்து கலாசார அமைச்சிடம் கையெழுத்துப் பெற்ற பின்னரே, கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளும் நிலை காணப்படுகின்றது. அதைத் தளர்த்த வேண்டும் என்றும், விமானக் கட்டணத்தை ஒரு நிர்ணய விலையில் சீராகப் பெறுவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் அவர் கோரினார்.

மேலும், இந்தச் சந்திப்பில் தலைமன்னாரில் இருந்து மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப் பிரதிநிதிகள் சிலரும், ஐயப்பன் பக்தர்கள் சிலரும் இணைந்திருந்தனர்.

Related Articles

Latest Articles