‘ஐயப்ப பக்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு’

இலங்கையில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் எதிர்நோக்கியிருக்கும் நடைமுறைப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதாக பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை ஐயப்ப குரு சுவாமிகள் ஒன்றியத்தினருக்கும் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் கொழும்பில் அமைந்துள்ள இந்துகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று  (28) நடைபெற்றது.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.உமாமகேஸ்வரனின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் இலங்கையில் உள்ள ஐயப்ப பக்தர்கள் எதிர்நோக்கியுள்ள நடைமுறை பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

கொவிட் 19 தொற்று காரணமாக இம்முறை சபரிமலையில் ஐயப்ப படிபூஜையில் கலந்துகொள்வதில் தடைகள் காணப்படுவதாக பிரதம குருசுவாமி சுப்பிரமணியம் ரவீந்திரகுமார் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் இது குறித்து உரிய கவனம் எடுத்து விரத மாலை அணிந்துள்ள பக்தர்களின் நலன் கருதி இந்தியாவுக்குச் செல்வதற்கான பயண ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் ஐயப்ப விரதமாலை அணிந்து இந்தியாவுக்குச் செல்ல முடியாத பக்தர்களுக்கான மாற்று வழிமுறைகள் குறித்தும் இலங்கை முழுவதும் ஐயப்ப வழிபாடுகளை முன்கொண்டு செல்வது பற்றியும் குரு சுவாமிமார் தமது கருத்துகளையும் வேண்டுகோள்களையும் முன்வைத்தனர்.

இலங்கையில் 18 வருடங்களுக்கு மேலாக சபரிமலை ஐயப்ப படிபூஜைகளில் பங்கேற்ற குருசுவாமிமார்களுக்கு அரசாங்க அங்கீகாரம் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இதன்போது முன்வைக்கப்பட்டது.

இது குறித்து பிரதமரின் இணைப்புச்செயலாளர் செந்தில் தொண்டமான் கருத்து வெளியிடுகையில்,

கொவிட் 19 பிரச்சினையால் இலங்கை மாத்திரமல்ல உலக நாடுகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இலங்கையில் உள்ள ஐயப்ப பக்தர்கள் இந்தியாவுக்கு யாத்திரை செல்வதிலும் பிரச்சினைகள் உண்டு.

அரசாங்க தரப்பினருடன் நான் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கிறேன். வழமைபோல் செல்வதற்கு இந்த வருடம் கொவிட் பிரச்சினை தடையாக உள்ளதால் உள்நாட்டில் மாற்று ஏற்பாடுகள் சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக கொழும்பு, அளுத்மாவத்தை அருள்மிகு ஸ்ரீ ஆனந்த ஐயப்பன் தேவஸ்தானத்தில் செய்யப்படும்.

இது தொடர்பில் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உயரதிகாரிகள் சுகாதார நடைமுறைகள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் சுகாதார அமைச்சுடன் பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இனி வரும் காலங்களில் கொவிட் 19 பிரச்சினை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பிறகு இந்தியாவுக்கு யாத்திரைக்காக குறைந்த செலவில் விமான சீட்டுகளை வழங்குதல், பயண ஏற்பாடுகள் குறித்து வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

அத்துடன் பக்தர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்பட்டால், தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை சுகாதாரப் பிரிவு, பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றுடன் கலந்துரையாடி செய்யவுள்ளோம்.

மேலும் இலங்கை முழுவதும் ஐயப்பன் பக்தர்கள் செறிவாக இருக்கக் கூடிய இடங்களில் ஐயப்ப வழிபாடுகளை முன்னெடுப்பதை நோக்காகக் கொண்டு இந்துகலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஆலயங்களுக்கு ஐயப்பன் சுவாமி சிலைகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் ஐயப்ப பஜனைகளை நடாத்துவதற்குத் தேவையான இசைக்கருவிகள் கொள்வனவு உள்ளிட்ட இதர செலவுக்காக அடுத்த வருடம் முதல் ஒருதொகை நிதியை ஒதுக்கீடு செய்வது தொடர்பில் பணிப்பாளருடன் நான் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கிறேன்.

இவ்வாறான பஜனை செயற்பாடுகளை அறநெறிப்பாடசாலைகளுடன் இணைந்து நடாத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் இருந்து சபரிமலை ஐயப்ப தேவஸ்தான படி பூஜையில் 18 வருடங்களுக்கு மேல் பங்கேற்ற குருசுவாமிமார்களுக்கு அரசாங்க அங்கீகாரத்துடனான சான்றிதழ் வழங்கப்படும். அதற்கு செந்தில் தொண்டமானின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் இந்துகலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி உரிய கடவுச்சீட்டு பிரதி மற்றும் உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியமாகும்.

ஐயப்ப குருசுவாமிகள் விரதகாலமான இரண்டு மாதங்களில் மாத்திரமல்லாது தொடர்ச்சியாக தமது தேவைப்பாடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இயங்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு இயங்கும் பட்சத்திலேயே நாம் நீண்டகால நோக்கங்களை அடையக் கூடியதாகவும் ஒருசில செயன்முறைகளை மிக இலகுவாகச் செய்யக் கூடியதாகவும் இருக்கும்.

இதன்மூலமே ஐயப்பன் புகழை இன்னும் மேலோங்கச் செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles