ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது எனவும், இறக்குமதி பொருட்கள் மீதான வரி 15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து டிரம்ப் பல்வேறு நாடுகள் மீதும் கடும் வரி விதிப்பை முன்மொழிந்தார். ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் புதிய வரிகள் அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஐரோப்பிய ஒன்றியம் பொருட்களுக்கு அமெரிக்கா 30 சதவீத வரியை விதிப்பதாக குறிப்பிட்டு இருந்தது. தற்போது அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என டிரம்ப் அறிவித்து உள்ளார்.
ஸ்காட்லாந்தின் டர்ன்பெரியில் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனை டிரம்ப் சந்தித்த பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. புதிய ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்காவிற்குள் நுழையும் ஐரோப்பிய ஒன்றிய பொருட்களுக்கு 15 சதவீத வரி விதிக்கப்படும்.
அதற்கு ஈடாக, ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்க எரிசக்தி பொருட்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை அதிக அளவில் வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.