ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று ஆரம்பமாகின்றது. முதல் ஆட்டத்தில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன.
13ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நவம்பர் 10 ஆம் திகதிவரை நடக்கிறது.
துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடக்கும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் மூன்று முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடக்க உள்ள இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.
அபிதாபியில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சுடன் மல்லுக்கட்டுகிறது.
சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி ஓராண்டுக்கு பிறகு களம் திரும்புவது ரசிகர்களின் ஆவலை தூண்டி உள்ளது. சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் விலகல் சென்னை அணிக்கு சற்று பின்னடைவு என்ற போதிலும் அதிகமான அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பது சாதகமான அம்சமாகும்.
4 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியில் கடைசி நேரத்தில் ‘யார்க்கர் மன்னன்’ மலிங்கா விலகியது கொஞ்சம் சறுக்கல் தான். ஆனாலும் சாதுர்யமாக பந்து வீசக்கூடிய பும்ரா, டிரென்ட் பவுல்ட், பேட்டின்சன் உள்ளிட்டோர் பந்து வீச்சில் அணியை தூக்கி நிறுத்தி விடுவார்கள்.
மும்பை அணியின் அசுர பலமே, அவர்களின் பேட்டிங் தான். கேப்டன் ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் கடந்த சீசனில் அமர்க்களப்படுத்தினர். இந்த ஆண்டும் அவர்கள் தான் தொடக்க வீரர்களாக அடியெடுத்து வைக்கிறார்கள்.
ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், சூர்யகுமார் யாதவ் அதிரடியில் மிரட்டுவார்கள். இப்படி எல்லா வகையிலும் மும்பை அணி வலுமிக்கதாக திகழ்வதால் சென்னை அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
ஐ.பி.எல்.-ல் சென்னை, மும்பை அணிகள் இதுவரை 28 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17-ல் மும்பையும், 11-ல் சென்னையும் வெற்றி பெற்றிருக்கின்றன. கடந்த ஆண்டு மும்பையுடன் மோதிய 4 ஆட்டங்களிலும் சென்னை அணி தோல்வியையே தழுவியது. இறுதி ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் கோப்பையை இழந்ததும் அடங்கும்.
இலங்கை நேரப்படி போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.