நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள பொதுமுடக்கத்தை (Lockdownஐ) ஒக்டோபர் 2 ஆம் திகதிவரை நீடித்தால் மரண எண்ணிக்கையை 10,400 ஆக குறைக்க முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், பொதுமுடக்கத்தை செப்டம்பர் 18ஆம் திகதிவரை நீடித்தால் உயிரிழப்புக்கள் 13,712 ஆகவும் பொருளாதார தாக்கம் 1.67 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் அமையும்.
இதுவே ஒக்டோபர் 2ம் திகதிவரை பொதுமுடக்கத்தை நீடித்தால் உயிரிழப்புக்கள் 10,400 ஆகவும் பொருளாதார தாக்கம் 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் அமையும் என இந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“Epidemiological and Economic Projections of Mitigation Measures for the Covid-19 Pandemic in Sri Lanka’s Roadmap” அறிக்கையில் முன்வைக்கப்பட்ட இந்த மதிப்பீடு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நேற்று முன்தினம் ( 26.08.2021) நடத்தப்பட்ட மெய்நிகர் கருத்தரங்கின் போது வெளியிடப்பட்டது.
இலங்கையில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில் முதற்தடவையாக நாட்டில் ஒரே நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியது.
ஊரடங்கு உத்தரவு முன்கூட்டியே தளர்த்தப்பட்டு, உரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிடின் மரண எண்ணிக்கை 16 ஆயிரம்வரை அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.