‘கச்சத்தீவு விவகாரம்’ – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு இ.தொ.கா. எதிர்ப்பு!

” இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்துவிட்டு, சிறுபான்மையின மக்களின் உரிமைகளை, பறிப்பதற்கு துணை போக வேண்டாம்.”

இவ்வாறு தமிழக முதல்வரை வலியுறுத்தியுள்ளார் இ.தொ.கா. உறுப்பினரும், பதுளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டீ.வீ. சென்னன்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,

” கச்சத்தீவை மீளப்பெறுமாறு இந்திய பிரதமரிடம், தமிழ்நாட்டு முதல்வர் மு.க‌. ஸ்டாலின் நேற்று கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவும் , இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரமே கச்சைத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.

அதேபோல் இலங்கையின் 13 ஆம் திருத்தசட்டமானது, இலங்கை சிறுபான்மையின மக்களுக்காக செய்துகொண்ட ஒரு ஒப்பந்தமாகும்.

இருப்பினும் இலங்கையில் பெரும்பான்மை இன தலைவர்களினால் இந்த 13 ஆம் சரத்து முழுமையாக நடை முறைப்படுத்தப்படவில்லை. அதை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை சிறுபான்மையின தலைவர்களும் தமிழ் மக்களும் இந்தியாவிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் நீங்கள் கச்சைத்தீவை மீள பெற வேண்டும் என இந்திய பிரதமரிடம் கூறுவதனால், இலங்கை பெரும்பான்மை இன தலைவர்களினால் இந்த ஒப்பந்தம் மேலும் தட்டிக் கழிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.

எனவே இலங்கை மக்களுக்கு உங்களால் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்துவிட்டு சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு துணை போக வேண்டாம்.” – என்றுள்ளது.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles