கஞ்சிபானி இம்ரான் குறித்து கிடைத்துள்ள உளவு தகவல்

நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான் எங்கு தலைமறைவாகியுள்ளார் என்பது தொடர்பான உளவு தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. அவற்றை வெளிப்படுத்த முடியாது. பாதாள குழுக்கள் நிச்சயம் ஒடுக்கப்படும். எத்தடை வரினும் யுக்தி நடவடிக்கை தொடரும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

குடுகாரர்களின் பணத்தில் வாழும் ஓரிரு சட்டத்தரணிகள் உள்ளனர், அவர்களால்தான் குற்றவாளிகள் தப்புகின்றனர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,

“ அத்துருகிரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இன்னும் இருவரைதான் கைது செய்யவேண்டியுள்ளது. ஏனைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எம்பிலிப்பிட்டிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் மற்றும் அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பில் தகவல்கள் வழங்குமாறு மக்களிடம் கோரி இருந்தோம். எனினும், தகவல்கள் கிடைப்பது குறைவு. எனவே, தமது பிள்ளைகளிடம் சட்டவிரோத ஆயுதம் இருந்தால்கூட அறிவியுங்கள். அது உங்கள் பிள்ளைகள் குற்றவாளியாவதை தடுக்கும்.

நாட்டில் குற்றமிழைத்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடி இருந்தாலும் குற்றவாளிகளை கொண்டுவருவோம். அதற்குரிய நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது.

யுக்திய நடவடிக்கை ஆரம்பமானபோது ஜுன் மாதத்துக்குள் மாற்றம் வரும் என கூறினேன். அந்த மாற்றம் வந்துள்ளது. டிசம்பர்வரை முன்னெடுக்கப்படவேண்டிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதேபோல யுக்திய நடவடிக்கைக்கு எதிராக பல தடைகள் உள்ளன, சட்ட ரீதியாகவும் தடைகள் வருகின்றன. எத்தடை வரினும் யுக்திய நடவடிக்கை தொடரும்.

மாகந்துரே மதுஷின் பணம் கிளப் வசந்தவிடம் இருந்தன என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் விசாரணைகளில் தெரியவரவில்லை.

கஞ்சிபானி இம்ரான் எங்கு உள்ளார் என புலனாய்வு தகவல்கள் உள்ளன. அவற்றை வெளிப்படுத்த முடியாது. ஆனால் சில சட்டத்தரணிகளால்தான் அவர்கள் தப்பிச்சென்றனர். குற்றச்செயல்களுடன் எந்தவொரு அரசியல்வாதி தொடர்புபட்டிருந்தாலும் உரிய ஆதாரங்கள் இருப்பின் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள்.” – என்றார்.

Related Articles

Latest Articles