கடன்களில் சிக்கித் தவிக்கும் இலங்கையும், எரிகிற வீட்டில் பிடுங்க காத்திருக்கும் சீனாவும்!

இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து மெள்ள மீண்டு வருகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்திவைக்கப்பட்ட கடன் உதவியின் பின்னர் வங்குரோத்து என்ற நிலையில் இருந்து மீண்டுள்ளது. இதற்கு அடுத்தகட்டமாக மிகச் சிக்கலான உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை இலங்கை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. ஆனால் மிக நெருக்கடியான இன்னுமொரு கட்டம் காத்திருக்கிறது. அதுதான் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு எவ்வளவு சிக்கலான விடயமோ, அதேபோன்று வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பும் சவால் மிகுந்த விடயம். உள்நாட்டு கடன் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும்போது உள்நாட்டு வங்கிக் கட்டமைப்பு சீர்குலைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மிக முக்கியமாக ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் வைப்புக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

இதில் மிகக்குறந்த பாதிப்புக்களுடன் இலங்கை அரசாங்கம் இதனை செய்துமுடித்துள்ளது. இதன் அடுத்தகட்டம், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு.

பாரிஸ் சமவாயம் மற்றும் இந்தியா, ஜப்பான் நாடுகள் கடன் மறுசீரமைப்பு பச்சைக் கொடி காட்டியுள்ளன. ஆனால் சீனா இன்னமும் முரண்பட்டு அல்லது முரண்பிடித்துக் கொண்டிருக்கிறது.

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக மேற்கொள்ளும் பட்சத்தில் மட்டுமே இலங்கை விழுந்துள்ள பாதாள குழியில் இருந்து ஓரளவு மீள முடியும். இதற்கு வெளிநாட்டு கடன் வழங்குனர்கள் ஒத்துழைக்க வேண்டும். குறிப்பாக இந்தியா, ஜப்பான், பாரிஸ் சமவாயம் போன்று குறைந்தபட்ச நிபந்தனைகளுடன் இந்த கடன் மறுசீரமைப்பிற்கு ஒத்துழைக்க வேண்டும். ஆனால் சீனா இந்த விடயத்தில் இலங்கையை பொறிக்குள் சிக்கவைக்க காத்திருக்கிறது அல்லது சூழ்ச்சி செய்கிறது என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பை நாம் மேற்கொள்ளப் போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்திருந்த சீனா, இதனை தற்போது ஆலோசித்து வருவதாக கூறுகிறது. ஆனால் இன்னமும் இந்த கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளத் தயார் என்று இன்னமும் உறுதியாக சீனா அறிவிக்கவில்லை. கடன் மறுசீரமைப்பு என்ற விடயத்தைப் பயன்படுத்தி, இலங்கையை எவ்வாறு சிக்க வைப்பது அல்லது தனக்கு சாதமான காய்களை எவ்வாறு நகர்த்துவது என்பது குறித்து பெய்ஜிங் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம் ஆகிய வெள்ளை யானைகளுக்கான கடன் உதவிகளை சீனா வழங்கியிருந்தது. ஒரு வேலைத் திட்டத்திற்கு கடன் வழங்கும்போது, அந்த வேலைத் திட்டம் வெற்றியளிக்குமா? கடன் பெறும் தரப்பினர் இதன்மூலம் வருமானத்தைப் பெற்று கடனை திருப்பிச் செலுத்துவார்களா? இதற்கான சாத்தியக்கூறுங்கள் உள்ளனவா? என்ற அடிப்படைக் கேள்விகளை கடன் வழங்குனர்கள் முன்வைப்பதுண்டு. ஆனால் இலங்கையில் சீனாவின் கடன் உதவியில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களில் அவ்வாறான கேள்விகள் கேட்கப்பட்டனவா என்ற சந்தேகங்கள் வலுவாக சாதாரண பொதுமக்கள் மத்தியில் உள்ளன.

காரணம், விமானமே வராத விமான நிலையத்திற்கும், கப்பலே வராத துறைமுகத்திற்கும் பல மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா இலங்கைக்கு வழங்கியுள்ளது. இலங்கைக்கு தற்போதிருக்கும் வெளிநாட்டுக் கடன்களில் சுமார் 10 வீதமான கடன் சீனாவிடமிருந்து பெறப்பட்டவையாகும். இவ்வாறு கடன்பெற்று, வங்குரோத்து அடைந்த நிலையில், அதிலிருந்து மீள முடியாமல் இலங்கை திணறிக் கொண்டிருக்கிறது. இதனால் 2022ஆம் ஆண்டு நவீன உலகில் எதிர்கொண்ட மிகப்பெரிய அவலயத்தை இலங்கை மக்கள் எதிர்கொண்டனர். எரிபொருளுக்காக, எரிவாயுவிற்காக பல இரவுகள் வீதிகளில் தூக்கங்களைத் தொலைத்து மக்கள் அலைந்தனர். கையில் பணமிருந்தும் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியாத அவலம் ஏற்பட்டது. குழந்தைகளுக்கு பால்மா வாங்கிக் கொடுக்க முடியாமலும். பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி முடியாமலும் தவித்த பெற்றோரின் ஆதங்கம் சொல்லில் அடங்காதவை.

இவ்வாறு மிகப் பெரிய அவலயத்தையும், நெருக்கடியையும் சந்தித்திருந்த இலங்கை மெள்ள மீண்டெழுந்து வருகிறது. இதற்கு சர்வதேச நாணய நிதியம், பாரிஸ் சமவாயம், இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட ஏராளமான தரப்பினரின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைத்து வருகிறது. ஆனால் சீனா மட்டும் இன்னும் மௌனம் காத்து வருகிறது. கடன் மறுசீரமைப்பை மையப்படுத்தி, சில இரகசிய சந்திப்புக்களை நடத்துகிறது. திரைமறைவில் பேரம் பேசல்களும் இடம்பெறுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். கடன் மறுசீரமைப்பிற்கு சீனா இலகுவில் இணங்காது என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால், ஆபத்தில் இருக்கும் அல்லது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு நோயாளியைக் காப்பாற்றுவதற்கு பேரம் பேசுவது எவ்வளவு அபத்தமோ, அந்த அபத்தத்தை சீனா முன்னெடுப்பதாகவே சிலர் கடிந்துகொள்கின்றனர்.

ஆனால், கடன் மறுசீரமைப்பில் நாம் இணங்கிச் செயற்படுவோம் என்ற சீனாவின் மென்மையான அறிக்கைகள் மட்டும் அவ்வப்போது வெளிவந்தவண்ணமுள்ளன.

Related Articles

Latest Articles