கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை இம்மாதம் (22) திறக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் (05) மூடப்படும் என அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம் எ. டக்ளஸ் தெரிவித்தார்
இதேநேரம் கதிர்காமம் மற்றும் உகந்தை முருகன் ஆலயங்களின் கொடியேற்றம் இம்மாதம் (29) இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக தடைப்பட்டிருந்த பாதயாத்திரை இவ்வருடம் மீண்டும் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் யாத்திரை தொடர்பாக உகந்தை முருகன் ஆலயத்தில்,அரச திணைக்களங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கதிர்காம பாதயாத்திரைக்கான குமண ஊடான காட்டுவழிப்பாதை இம்மாதம் 22ஆம் திகதி காலை உகந்தை முருகன் ஆலயத்தில் இடம்பெறும் பூஜையை தொடர்ந்து 7 மணியளவில் திறக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி மூடப்படும். இக்காலத்தில் தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்படும் பாதை, பிற்பகல் 3 மணிக்கு மூடப்படும் எனவும் குறிப்பிட்டனர்.
அதுபோல் பாதயாத்திரிகர்களுக்கான பாதுகாப்பு சுகாதார சேவைகள் குடிநீர் வசதி போன்றவை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றனர்.
மேலும் பாதயாத்திரிகர்கள் சூழலை மாசுபடுத்தும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனைகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.










