” ஆறுமுகன் தொண்டமான் காலத்தில் கந்தப்பளையில் பொதுசந்தை நிர்மாணிப்பதற்கு 80 பேர்ச்சஸ் காணி ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த காணி தற்போது தனியார் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பிரதேச சபை தலைவர் ஒருவர் ஊடாக, காங்கிரஸ் உயர்மட்டத்துக்கு ‘தரகு பணமும்’ வழங்கப்பட்டுள்ளதாக தகவல்.
மக்களின் நலன் கருதி ஒதுக்கப்பட்ட இந்த காணி தொடர்பில், முறைப்பாடுகளை செய்தும், காங்கிரஸின் மேல் மட்டம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் கட்சியில் இருந்து வெளியேறினேன்.”
இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் உப தலைவர் பதவியை வகித்த, நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கருப்பையா ஜெயராம் தெரிவித்தார்.
காங்கிரஸின் இருந்து வெளியெறிய அவர் நேற்று மலையக மக்கள் முன்னணியில் இணைந்துகொண்டார்.
இந்நிலையில் கட்சியில் இருந்து வெளியேறியமைக்கான உண்மையான காரணத்தை இன்று அவர் ‘மலையக குருவி’யிடம் வெளியிட்டார்.
” நான் 37 வருடங்கள் காங்கிரஸில் செயற்பட்டுள்ளேன். உப தலைவர் பதவியையும் வகித்தேன். தேசிய சபை ஊடாக நடைபெறும் வாக்கெடுப்புமூலமே பதவிகளுக்கு தெரிவாகியுள்ளேன். எனக்கு எவரும் வலிந்து பதவிகளை வழங்கியது கிடையாது.
கந்தப்பளை நகரில் பிரதான வீதியில்தான் சந்தை நடத்தப்பட்டு வந்தது. இது தொடர்பில் அமரர் ஆறுமுகன் தொண்டமானிடம் கூறியதையடுத்து, சந்தையை நிர்மாணிப்பதற்கு 80 பேர்ச்சஸ் காணியை ஒதுக்க நடவடிக்கை எடுத்தார்.
சந்தை அமைப்பதற்கான இடம்போக, எஞ்சியவற்றை காங்கிரசுக்காக பாடுபட்டவர்களுக்கும், ஏனையோருக்கும் பிரதேச சபை ஊடாக வழங்குமாறும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கந்தப்பளை, சித்தி விநாயகர் ஆலயத்துக்கு அருகில் உள்ள இந்த காணியில் சந்தை நிர்மாணிக்கப்படவில்லை. தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பெப்ரவரி 29 ஆம் திகதி நடைபெற்ற தேசிய சபைக் கூட்டத்திலும் குறிப்பிட்டேன். தனிப்பட்ட ரீதியிலும் முறையிட்டேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேசிய சபை வாக்கெடுப்பில் எனக்கு திருப்தியும் இல்லை. அதனால்தான் உப தலைவர் பதவிக்குகூட போட்டியிடவில்லை.
காணி விற்ற பணத்தில் கட்சியின் மேல் மட்டத்துக்கு சுமார் 2 கோடி ரூபாவரை வழங்கப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.” – என்றும் கருப்பையா ஜெயராம் குறிப்பிட்டார்.
