கந்தப்பளையில் பலத்தைக்காட்டிய இ.தொ.கா., கம்பனிகளிடம் பதுங்குவது ஏன்?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளித்த அரசாங்கம் தற்போது அந்த உறுதிமொழியிலிருந்து ‘பல்டி’ அடித்துள்ளது – என்று நவசமமாஜக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என்ற உறுதிமொழி தேர்தல் காலங்களில் வழங்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிந்த பின்னர் ‘அடிப்படை’ என்ற சொற்பதம் மாயமாகிவிட்டது. அரசாங்கமும், அதன் பங்காளிக்கட்சியான காங்கிரசும் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.

அதுமட்டுமல்ல ஊழியர்களுக்கு சட்டபூர்வமாக கிடைக்கவேண்டிய விடயங்களைக்கூட சம்பள உயர்வாகக்காட்டும் வகையில் நயவஞ்சக சம்பள சூத்திரத்தையே கம்பனிகள் முன்வைத்துள்ளன. இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. அரசிலுள்ள பங்காளி என்ற வகையில் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கவேண்டிய பொறுப்பு காங்கிரசுக்கு இருக்கின்றது.

கந்தப்பளையில் தோட்ட முகாமையாளருக்கு எதிராக மக்களை திரட்டி பலத்தை காட்டிய காங்கிரஸ், கம்பனிகளிடம் பதுங்குவது ஏன்? உறுதியானதொரு முடிவை இது விடயத்தில் காங்கிரஸ் அறிவிக்கவேண்டும். கூட்டு ஒப்பந்தம் மற்றும் அரசாங்கத்திலிருந்து வெளியேறினால் அனைவரும் இணைந்து போராடலாம்.” – என்றார் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன.

Related Articles

Latest Articles