பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்தவித சமரசமும் கிடையாது என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
“தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 200 ரூபா வழங்கப்படும்.” – என்று முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடக பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் வினவியபோதே செந்தில் தொண்டமான் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“ தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த பொழுது சம்பள உயர்வு வழங்க முடியாது என ஆரம்பத்தில் கம்பனிகள் தெரிவித்து வந்தன. கடும் அழுத்தத்திற்கு பிறகு ஊக்குவிப்பு தொகை மாத்திரம் வழங்க தயார் என தெரிவித்தன.
இந்நிலையில், அரச வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதை அடுத்து, வேறு வழியின்றி தற்போது கம்பனிகள் 1200 ரூபா அடிப்படை சம்பளம் வழங்க முன்வந்துள்ளனர்.
ஒரு வருட காலமாக ஒரு ரூபாய் சம்பள உயர்வு கூட வழங்க முடியாது என தெரிவித்த கம்பனி,தற்போது 200 ரூபா அதிகரிப்பு வழங்க முன்வந்தமைக்கான காரணம் அரசாங்கத்தால் அரச வர்த்தமானி வெளியிடுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.
ஆதலால் கம்பனிகளுடன் எவ்வித சமரசமும் கிடையாது என செந்தில் தொண்டமான் தெரிவித்ததுடன்,அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை கம்பனி அமுல்படுத்தாவிடின் கம்பனியின் முதன்மை இயக்குனர் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
