இபோச பஸ்சாரதிமீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு அவரை வேனில் கடத்திச்சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணொருவர் உட்பட ஐவர் கொழும்பில் வைத்து, கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொத்மலை , கடதொர பிரதேசத்தைச் சேர்ந்த இ.போ.ச பஸ் சாரதியான ஹேமந்த ராஜபக்ச, கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இபோச பஸ்ஸில் வந்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கம்பளை, ரிவர் சைட் பகுதியில் வைத்து நால்வர் குறித்த பஸ்ஸில் ஏறியுள்ளனர்.

பின்னர் அவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தி, அவரை கம்பளை, ஜயமாலபுர பகுதியில் வைத்து வேனொன்றில் கடத்தி சென்றனர்.
இந்நிலையில் அன்றைய தினம் இரவே, ஒருகொடவத்தை பிரதேசத்தில் வைத்து கடத்தல் காரர்களிடமிருந்து தப்பிவந்து கம்பளை பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்து பின்னர் சிகிச்சைக்காக கம்பளை வைத்திய சாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இந் நிலையில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த கம்பளை பொலிஸார் நேற்று முன்தினம் (25) இரவு சந்தேக நபர்கள் ஆறுபேரில் ஐந்து பேரை கொழும்பில் வைத்து கைது செய்துள்ளதுடன், பழமையான வாள் மற்றும் கடத்தலுக்கு பயன் படுத்திய வேனினையும் கைப்பற்றியுள்ளனர். தொல்பொருள் பெறுமதிமிக்கதாகக் கூறப்படும் அந்த வாளுக்காகவே இவர் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
கம்பளை பொலிஸார் தொடர்ந்து சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு விசாரணையின் பின் சந்தேக நபர்களை நீதி மன்றில் ஆஜர்படுத்தவும் தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்யவும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
கம்பளை நிருபர்










