கரோலினா தோட்ட மக்களின் வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது

தோட்ட அதிகாரியின் உத்தரவாதத்தின் பேரில் வட்டவளை கரோலினா தோட்ட வேலை நிறுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என மலையக மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் சுவர்ணலதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

கரோலினா தோட்டத் தொழிற்சாலை திருத்த வேலை காரணமாக கடந்த சில நாட்களாக மூடப்படடிருந்த நிலையில்,  தொடர்ந்தும் தொழிற்சாலை மூடப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தோட்ட தொழிலாளர்கள் தங்களுடைய வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் தொடர்பாக எங்களுடைய மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மேலுசாமி இராதாகிருஸ்ணனின் கவனத்திற்கு எங்களுடைய தோட்ட கமிட்டி தலைவர் கொண்டு சென்றார்.

தலைவர் இது தொடர்பாக நேரம் ஒன்றை நிர்வாகத்திடம் பெற்றுக் கொண்டு பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு பணிப்புரைவிடுத்தார். அதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

அந்த குழுவில் மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச் செயலாளர் விஸ்லநாதன் புஸ்பாமலையக தொழிலாளர் முன்னணியின் தொழில் உறவு அதிகாரி க.கனகராஜ் மற்றும் நானும் நியமிக்கப்பட்டோம்.

இதனை தொடர்ந்து இந்த குழவினர் தோட்ட நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு நேரத்தை பெற்றுக் கொண்டு இது தொடர்பான பேச்சுவாரத்தை தோட்ட காரியாலயத்தில் கடந்த (23.09.2021) அன்று மாலை நடைபெற்றது.

இதன்போது தோட்ட நிர்வாகத்தினர் 3 வாரங்களுக்குள் மூடப்பட்டுள்ள தொழிற்சாலையை திறப்பாதற்கான எற்பாடுகளை செய்து வருவதாகவும் இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் பெற்றுத் தருவதாகவும் கூறியதுடன் தொழிலாளர் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு வேலை திரும்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

அதன்படி தொழிலாளர்கள் நேற்று (24.09.2021) முதல் வேலைக்கு திரும்பியுள்ளதுடன் தொழிற்சாலை 3 வாரங்களுக்குள் திறக்கப்படாவிட்டால் தங்களுடைய வேலை நிறுத்த போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

ஏற்கனவே பல தோட்டங்களில் தோட்ட நிர்வாகம் தொழிற்சாலை திருத்த வேலைக்காக மூடப்படுவதாக கூறி மூடப்பட்ட தொழிற்சாலைகள் பலவும் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது எனவும் அம்பேகமுவ பிரதேச சபையின் உறுப்பினர் சுவர்ணலதா மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles