களுத்துறை மாவட்ட மக்கள் பொறுப்புடன் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் சண்.பிரபா தெரிவித்துள்ளார்.
மாவட்ட தோட்டப் பகுதிகளில் இடம்பெறும் பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவித்ததாவது,
களுத்துறை மாவட்டத்தில் வரலாற்றில் முதற்தடவையாக தமிழ்ப்பேசும் பிரதிநிதியொருவர் வெற்றிபெறும் வாய்ப்பு அதிகமாகவே காணப்படுகின்றது. 2015ஆம் ஆண்டுத் பொதுத்தேர்தலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் இம்முறை ஐ.தே.கட்சி இரண்டுக்கும் மேற்பட்ட ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
அவ்வாறான சூழ்நிலையில் இரண்டாவதாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு தமிழ்ப் பேசும் பிரதிநிதியயொருவருக்கே அதிகமாக இருக்கின்றது. இந்த யாதார்த்த நிலைமையை புரிந்துக்கொண்டு களுத்துறை மாவட்ட மக்கள் வாக்களிக்க வேண்டும்.
அத்தோடு தங்களுடைய சுயநலத்துக்காகவும் தங்களுக்கு கிடைக்கின்ற அற்ப சொற்ப சலுகைகளுக்காகவும் இன்று வாக்குகளை பிறருக்கு பெற்றுக்கொடுக்க துடிக்கும் தேர்தல் கால முகவர்களிடம் இருந்து களுத்துறை மாவட்ட மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
இந்தத் தேர்தல் வெறுமனே கைக்கட்டி பார்த்துக்கொண்டிருக்கும் விடயம் அல்ல. இம்மாவட்ட மக்கள் தங்களுக்கான தமிழ்ப்பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முஸ்தீபு காட்ட வேண்டும். ஆகவே களுத்துறை வாழ் மக்கள் மற்றும் புத்தி ஜீவிகள் சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் , அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து களுத்துறை மாவட்ட மக்களை ஒட்டு மொத்தமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துக்கொண்டார்.