காசாவில் போரை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்!

காசாவில் இஸ்ரேல் முன்வைத்த தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றுக்கான கோரிக்கையை ஹமாஸ் அமைப்பு நிராகரித்த நிலையில் காசா போரை தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி அளித்துள்ளார்.

இஸ்ரேலில் காசா போருக்கு எதிர்ப்பு வலுத்து வருவதோடு, போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் ஏமாற்றத்தை வெளியிட்டிருக்கும் சூழலில் இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களில் மேலும் பல பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கு பரிந்துரைத்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை களைவதற்கும், தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றுக்குமே அழைப்பு விடுத்திருந்தது. எனினும் இதனை நிராகரித்த ஹமாஸ், எஞ்சியிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு பிரதி உபகாரமாக போரை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய நெதன்யாகு, ‘எமது இருப்புக்காக வெற்றி வரை போராடுவதைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு தேர்வு இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் மீது அழுத்தம் கொடுப்பதற்கு இராணுவத்தை அறிவுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘ஹமாஸின் கோரிக்கைகளுக்கு தற்போது நாம் சரணடைந்தால், எமது படையினர், எமது உயிரிழந்த மற்றும் காயமடைந்த வீரர்கள் பெற்ற அனைத்து பாரிய வெற்றிகளையும் இழக்க நேரிடும்’ என்று நெதன்யாகு குறிப்பிட்டார்.

காசாவில் ஹமாஸ் தொடர்ந்து நிலைகொண்டிருப்பது ‘ஜனாதிபதி டிரம்பின் முக்கியமான நோக்கை ஒருபோதும் உண்மையாக்க முடியாத நிலையை ஏற்படுத்தும்’ என்றும் நெதன்யாகு வாதிட்டுள்ளார். காசாவில் உள்ள மக்களை வெளியேற்றி அந்தப் பகுதியை சுற்றுலா தலமாக மாற்றுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.

எனினும் நெதன்யாகுவின் இந்த அறிக்கைக்கு பணயக்கைதிகளின் குடும்பங்களின் அமைப்பு கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

Related Articles

Latest Articles