எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 12 ஆந் திகதி நுவரெலியாவிலிருந்து அட்டன் வரையிலான ஊர்திகளுடன் கூடிய நடைபயணத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவும், பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை அட்டன் அஜந்தா விருந்தகத்தில் இடம்பெற்ற சங்கத்தின் முக்கியஸ்தர்கள் கூட்டத்தில் பேசும் போது தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், நாம் இதுவரை காலம் மேற்கொண்டு வந்த விமர்சன அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு இனிமேல், மக்கள் நலன்சார்ந்த விடயங்களுக்கும், அபிவிருத்திகள் மற்றும் உரிமைகளுக்கும் குரல்கொடுக்க வேண்டிய காலத்தில் இருக்கின்றோம். அதுவே இன்றைய தேவையும் ஆகும். அடுத்தவர்களைப் பற்றி விமர்சிக்காமல் நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.
பெருந்தோட்ட மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படும் மோசமான நிலையிலிருந்து விடுபட்டு இந்த நாட்டில் ஏனைய சமூகத்தவர்களுக்கு இணையாக வாழ்வதற்கு காணி உரிமை அவசியமாகும். நல்லாட்சி அரசாங்கத்தில் தலா ஏழு பேர்ச் காணியில் தனிவீட்டுத் திட்டத்தை நாம் மேற்கொண்டிருந்தாலும் பூரணமாக நிறைவேற்ற முடியவில்லை. இன்றைய அரசாங்கத்தில் வீடுகளைக் கட்டிக் கொடுக்க முடியாவிட்டாலும், தலா 10 பேர்ச் காணியை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளமை வரவேற்கத் தக்க விடயமாகும்.
இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இந்த நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு “மலையகம் 200” நிகழ்வுகளை பலரும் நடத்தி வருகின்றார்கள். அரசாங்கம் டிசம்பர் மாதத்தில் நுவரெலியாவில் நடத்தவுள்ளதோடு, சில அரசசார்பற்ற நிறுவனங்கள் தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை நடைபவனியை மேற்கொண்டுள்ளன. வடக்கு, கிழக்கு மற்றும் வெளிநாடுகளிலும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எமது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால வாழ்வியல் சம்பந்தமான ஊர்திகளுடன் ஓகஸ்ட் மாதம் 12 ஆந் திகதி நுவரெலியாவிலிருந்து நானுஓயா, லிந்துல, தலவாக்கொல்லை, கொட்டகலை ஊடாக அட்டன் மல்லியப்பூ சந்தி வரை நடைபயணத்தை மேற்கொள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஏற்பாடு செய்துள்ளோம்.
நடை பயணத்தில் நானும் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், வீ. இராதாகிருஸ்ணன், எம்.உதயகுமார், வேலு குமார் உட்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளோம். அந்தந்த பகுதியில் உள்ளவர்கள் எம்மோடு இணைந்து கொண்டு மலையகத்தின் எழுச்சியை நாட்டுக்கும் உலகத்துக்கும் எடுத்துக் காட்ட வேண்டும். இது தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டங்கள் எதிர்வரும் 5 ஆந் திகதி ஒரே நேரத்தில் மலையகத்தின் பல பிரதேசங்களிலும் இடம்பெறவுள்ளன. எனவே, சமூக உணர்வோடு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.