தனது 72 ஆவது வயதில் 26 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்நாள் முழுவதும் காதல் மன்னனாக வாழ்ந்த Geoffrey Edelsten இன்று மெல்பேர்னில் காலமானார்.
இறக்கும்போது அவருக்கு வயது 78. Geoffrey Edelsten மூன்றாவது திருமணத்தை, கடந்த 2015 ஆம் ஆண்டு மெல்பேர்னில் செய்துகொண்டபோது, அந்த அமெரிக்க பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கான விஸா முடிவதற்கு பத்துமணி நேரமே மீதமிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Geoffrey Edelsten அடிப்படையில் மருத்தவர். ஆனால் மிகப்பெரிய செல்வந்தர். பகட்டாக வாழ்க்கை வாழ்வதிலும் வாழ்ந்து காட்டுவதிலும் மிகப்பெரிய பிரியமுடையவர். ஆஸ்திரேலிய உதைபந்தாட்ட கழக உரிமையாளர். தொழிலதிபர். எல்லாவற்றுக்கும் மேலாக காதல் மன்னன். வாழ்நாள் முழுவதும் சர்சைகளாலும் பெண்டிர்களாலும் சூழ்ந்து கிடந்தவர்.
இவரிடம் முன்னர் சிகிச்சைக்காக வந்த ஒரு நோயாளியை தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவரது மருத்துவ அனுமதி பறிக்கப்பட்டது. ஆனாலும், Geoffrey Edelsten எண்ணுக்கற்ற வைத்திய நிறுவனங்களை நடத்திவந்தார். அவற்றால் வந்த வருமானத்தையும் தனது சொத்துக்களையும் விளையாட்டிலும் பெண்களுடனான களியாட்டத்திலும் அள்ளி இறைத்தார். தனி ஹெலிக்கொப்டரில் ஆஸ்திரேலிய வானில் பறந்து திளைத்தார்.
Geoffrey Edelsten தனது பணத்தில் பெருந்தொகையை தொண்டு அமைப்புக்களுக்கும் பொதுச்சேவைகளுக்கும் அள்ளி இறைத்தார்.
ஆனாலும் இவருக்கு எப்போதும் புதிது புதிதாக அழகிய பெண்கள் தேவையானபடியே இருந்தது. மட்டுமல்லாமல், ஊடகங்களில் தனது பெயர் எந்த வழியிலாவது வந்துகொண்டிருக்கவேண்டும் என்ற போதை உடல் முழுவதும் நிறைந்திருந்தது.
Geoffrey Edelsten 1980 இல் 19 வயதான Leanne Nesbitt என்ற ஆஸ்திரேலிய மொடல் அழகியை திருமணம் செய்தார். மூன்று வருடங்களில் அந்தத் திருமணம் முறிந்தது. 2009 ஆம் ஆண்டு தனது 66 வயதில் கலிபோர்னியாவை சேர்ந்த 25 வயதுடைய Brynne Gordon என்ற உடற்கல்வி பயிற்றுனரை திருமணம் செய்தார்.
இவரும் ஒரு மொடல் அழகி மற்றும் நடிகை. மெல்பேர்னில் சுமார் 550 பேர் முன்னியிலையில் திருமணம் நடைபெற்றது. முப்பது லட்சம் டொலர்கள் செலவின் இடம்பெற்ற இந்த திருமணம் ஐந்து வருடங்களில் முறிந்தது.
கடைசியா, கடந்த 2015 ஆம் ஆண்டு – தன்னிலும் பார்க்க 46 வயது குறைந்த Gabi Grecko என்ற அமெரிக்க அழகியை மெல்பேர்னில் திருமணம் செய்துகொண்டார். இந்த செய்தியும் படங்களும் ஆஸ்திரேலிய ஊடகங்களில் மீண்டும் இவர் தொடர்பாக குலுங்கத்தொடங்கின.
இந்த திருமணம் தொடர்பாக பின்பொருதடவை ஊடகமொன்றுக்கு செவ்வியளிக்கும்போது, தான் விரும்பிய அந்தப்பெண்ணின் விஸா முடிவதற்கு பத்து மணித்தியலங்களே இருந்த காரணத்தினால் – முன்பு போல் அல்லாமல் அவசர அவசரமாக – ஆடம்பரமில்லாமல் திருமணத்தை முடித்துக்கொள்ள வேண்டியதாயிற்று என்று குறிப்பிட்டிருந்தார்.