மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி அடிப்படை நாட் சம்பளமாக 900 ரூபாவும், மேலதிக கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையே நடைபெற்ற கூட்டு ஒப்பந்தபேச்சு இணக்கப்பாட்டுக்கு வராததால் இவ்விவகாரத்தை சம்பள நிர்ணய சபைக்கு கொண்டுசெல்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி சம்பள நிர்ணயசபை இன்று கூடியது. தொழிற்சங்கங்கள், கம்பனிகள் மற்றும் அரச தரப்பு பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டிருந்தனர். அடிப்படை நாட் சம்பளமாக 900 ரூபாவும், மேலதிக கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்கப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது.
இதற்கு ஆதரவாக 11 பேர் வாக்களித்தனர். தொழிற்சங்க தரப்பில் இருந்து 8 பேரும், அரச தரப்பில் இருந்து மூவரும் வாக்களித்தனர். இதன்படி திட்டம் நிறைவேறியுள்ளது. தொழிலாளர்கள் வேலைக்குசென்றால் நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஊழியர் சேமலாப நிதி, நம்பிக்கை நிதி ஆகியவற்றுக்கான அறவீட்டின்போது குறித்த ஆயிரம் ரூபாவே கருத்திற்கொள்ளப்படும்.