நுவரெலியாவை பிறப்பிடமாக கொண்ட கிளப் வசந்த பெரேராவுக்கு நுவரெலியா நகர மக்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.
நுவரெலியா நகரில் வெள்ளைக் கொடிகளை பறக்கவிட்டு தமது அனுதாபத்தை நகர மக்கள் வெளிப்படுத்தினர்.
அத்துருகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பிரபல வர்த்தகர், கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கொல்லப்பட்டார்.
நுவரெலியாவை பிறப்பிடமாக கொண்ட இவர் ஆரம்ப கல்வியை நுவரெலியா அவலேடிஸ் பாடசாலையில் கற்றார். பின்னர் நுவரெலியா காமினி வித்தியாலயத்தில் கற்ற இவர் 1988 ஆம் ஆண்டு க.பொ.த (உயர் தர) பரீட்சையில் தோற்றி, கணித பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவராக திகழ்ந்தார்.
பாடசாலை கல்வியை தொடர்ந்து நுவரெலியா நகரில் காமினி வசந்த என அழைக்கப்பட்ட இவர் சன்ஹில் ஹோட்டல் உரிமையாளரானார். இதையடுத்து சன்ஹில் வசந்த என புனைபெயரில் அழைக்கப்பட்ட இவர் 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற நுவரெலியா மாநகர சபை தேர்தலிலும் போட்டியிட்டார்.
இதன்போது ஐக்கிய தேசிய கட்சி சார்பில் தேர்தலில் களம் இறங்கிய வசந்த தோல்வியை தழுவிய பின் நுவரெலியாவிலிருந்து கொழும்பு பம்பலப்பிட்டி பகுதிக்கு சென்று விட்டார். அங்கு தனது வர்த்தக நடவடிக்கையை தொடர்ந்த அவர் கெரோக்கி வசந்த, கிளப் வசந்த என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டு பிரபல கோடீஸ்வர வர்த்தகரானார்.
-ஆ.ரமேஸ்.
